;
Athirady Tamil News

வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி பேச்சு..!!

0

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கீ பாத்’(மனதின் குரல்) என்ற பெயரில் வானொலியில் உரையாற்றி வருகிறார். நேற்றும் இதேபோல் வானொலியில் பேசினார்.

அப்போது அவர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்(ஏப்ரல் 14), வேளாண் துறை, யோகா பற்றி கருத்து தெரிவித்தார்.

மோடி கூறியதாவது:-

இந்திய விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க மத்திய அரசு வேளாண் துறையில் பல்வேறு விரிவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராம அளவிலான உள்ளூர் சந்தைகள், ஒட்டுமொத்த சந்தைகள் ஆகியவற்றை உலகச் சந்தைகளுடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 22 ஆயிரம் கிராமப்புற சந்தைகளில் தேவைப்படும் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சந்தைகள் வேளாண் விளைபொருள் சந்தை குழு மற்றும் ‘இ-நாம்’ என்னும் மின்னணு சந்தையுடன் இணைக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை வெகுதூரம் சென்று விற்பனை செய்யவேண்டிய அவசியம் இருக்காது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

வேளாண்மையும், விவசாயிகளும் நாட்டின் பொருளாதாரத்துக்கு சாதாரண மக்களின் முன்னேற்றத்துக்கும் மிகவும் முக்கியம் என்பதை மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ராம் மனோகர் லோகியா, சரண்சிங், தேவிலால் போன்ற மாபெரும் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதனால்தான் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், குறிப்பிட்ட வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இன்று விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பமும் கிடைக்கிறது. இது நமக்கு விவசாயம் சார்ந்த உற்பத்தியாளர்களுக்கு மிகவும் உதவுவதாக அமையும்.

வசதி படைத்த மற்றும் சீமான் வீட்டு பிள்ளைகள் மட்டுமே கனவுகளை நனவாக்கி வாழ்வில் முன்னேற்றம் காண முடியும், பின்தங்கிய மற்றும் ஏழ்மையான குடும்பத்தினரின் பிள்ளைகளால் அது முடியாது என்ற நிலையை தகர்த்தவர் டாக்டர் அம்பேத்கர். வெற்றிக்கான விதையை ஏழை, பின்தங்கிய குடும்பத்தினரின் மனதில் விதைத்தவர்.

ஒரு கட்டத்தில் அம்பேத்கரை சிலர் கேலி செய்தனர். அவரை வளர்ச்சியின் ஏணியில் ஏறவிடாமல் தடுக்க முயன்றனர். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அவர் பெரிய அளவில் எதையும் சாதித்து விடக்கூடாது என்று இப்படி தடுத்தனர்.

ஒட்டுமொத்த புதிய இந்தியாவின் வரைபடம் வித்தியாசமானது. அது அம்பேத்கரின் இந்தியாவாகவும், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களின் இந்தியாவாகவும் உள்ளது.

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 14-ந்தேதி முதல் மே மாதம் 5-ந்தேதி வரை கிராமங்களின் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, சமூக நீதி ஆகியவற்றுக்காக நாடு முழுவதும் கிராமங்களில் தனித்தனி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த பிரசாரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டுகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் இந்தியா தொழில்மயமாவதன் அவசியம் குறித்து பேசினார். அப்போதுதான் வேலை வாய்ப்பும், வளர்ச்சியும் ஏற்படும் என்றார். இன்று, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் அம்பேத்கரின் கனவு மெய்ப்பட்டு வரு கிறது.

அம்பேத்கர் சுய நம்பிக்கை கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அதனால் யாரும் வறுமையின் பிடியில் இருக்கக் கூடாது என்று விரும்பினார். ஏழைகளுக்கு பணத்தை கொடுப்பதன் மூலம் மட்டுமே வறுமையை போக்க முடியாது என்ற கொள்கையிலும் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்தார். அதனால்தான் இன்று நமது நிதிக் கொள்கையான ‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப்’ திட்டம் மூலம் இளம் கண்டுபிடிப்பாளர்கள், இளம் தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்படு கின்றனர்.

நாடு சுதந்திரம் பெற்றபோது மக்கள் அனைவரும் சாலை வழி போக்குவரத்தை மேம்படுத்தவேண்டும் என்று மட்டுமே பேசினர். அப்போது தொலைநோக்கு பார்வையுடன் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் காண துறைமுகங்களும், நீர் வழி இணைப்பு தேவை என்றும் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

நாட்டின் வளர்ச்சிக்கு கூட்டாட்சி தத்துவம், கூட்டாட்சி அமைப்பு, மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டியதன் முக்கியத்துவம் பற்றி அவர் பேசினார். இன்று நாங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அனைத்து விதமான ஆளுமை முறைகளையும் கூட்டுறவு கூட்டாட்சியின் மந்திரமாக கொண்டுள்ளோம்.

நான் ஒரு யோகா ஆசிரியர் அல்ல. ஆனால் நிச்சயமாக யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். ஆனாலும் சிலர் தங்களது கற்பனைத் திறன் மூலம் என்னை ஒரு யோகா ஆசிரியராகவே ஆக்கி உள்ளனர். அதன்விளைவாக 3டி கார்ட்டூன் மூலம் எனது யோகா பயிற்சிகளை தொகுத்து இருக்கின்றனர்.

அந்த வீடியோ தயாராக உள்ளது. இதை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வேன். இதன் மூலம் ஆசனங்களையும், பிரணாயாம பயிற்சிகளையும் அவர்கள் தெரிந்து கொண்டு பயன் அடைய முடியும். சாதாரண மக்களுக்கு உடல் ஆரோக்கியம் எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் நடவடிக்கையாக இந்த யோகா பயிற்சி வீடியோ வெளியிடப்படும்.

தூய்மை இந்தியாவுடன் சுகாதார இந்தியாவையும் ஒருங்கிணைக்கவேண்டும் என்று எனக்கு கடிதங்கள் மற்றும் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மக்கள் தெரிவித்த யோசனையை ஏற்றுக் கொண்டு இதை செயல்படுத்த இருக் கிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − three =

*