;
Athirady Tamil News

எகிப்து அதிபர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு – அல்-சிசி அமோக வெற்றி பெறுவார் என கணிப்பு..!!

0

தற்போதைய அதிபர் அப்தெல் ஃபாட்டா அல்-சிசி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிலர் சிறையில் உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனால், அல்-சிசியை எதிர்த்து முக்கிய பிரமுகர்கள் யாரும் போட்டியிடவில்லை. கடைசி நேரத்தில் மோசா முஸ்தபா மோசா என்பவர் வேட்பாளராக களம் இறங்கினார்.

முன்னாள் ராணுவத் தளபதியான அல்-சிசிக்கு தற்போது மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளதால் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் அந்நாட்டின் அதிபராக இருந்து வரும் அல்-சிசி இதற்கு முன்னர் துணை பிரதமர், ராணுவ மந்திரி ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்நிலையில், முதல்நாள் வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இந்திய நேரப்படி பகல் 12.30 மணியளவில் தொடங்கியது. அந்நாட்டில் வாக்களிக்க தகுதியுள்ள சுமார் 6 கோடி மக்கள் இந்த 3 நாள் தேர்தலில் பங்கேற்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றவுள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற 2 நாள் அதிபர் தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகளே பதிவாகின. இரண்டு நாட்களிலும் வெறும் 37 சதவீதம் வாக்குகளே பதிவானதால் மூன்றாவது நாள்வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது. இதன் விளைவாக 47.5 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். மொத்தம் பதிவான வாக்குகளில் 96.9 சதவீதம் வாக்குகளை அல்-சிசி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது நடைபெறும் தேர்தலிலும் மந்தமான அளவில் மட்டுமே வாக்குகள் பதிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். வாக்குகள் எவ்வளவு குறைவாக பதிவானாலும், அவற்றில் பெரும்பாலானவை அல்-சிசிக்கு சாதகமான வாக்குகளாகவே இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*