;
Athirady Tamil News

ஐகோர்ட்டுகளில் 10 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தேக்கம்..!!

0

நாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கீழ்கோர்ட்டுகள் வரை அனைத்து கோர்ட்டுகளிலும் வழக்குகளின் தேக்கம் அதிகமாக உள்ளது. பல வழக்குகள் நீண்ட காலமாக முடிவு எட்டப்படாமல் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.

எனவே வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை சட்டத்துறை எடுத்து வருகிறது. ஆனாலும், வழக்கு தேக்கம் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது.

குறிப்பாக ஐகோர்ட்டுகளில் வழக்கு தேக்கம் மிக அதிகமாக உள்ளது. அதில் பல வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எட்டப்படாத நிலையில் உள்ளன. நாட்டில் மொத்தம் 24 ஐகோர்ட்டுகள் உள்ளன. இவற்றில் 42 லட்சத்து 69 ஆயிரம் வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன.

இதில் 10 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருவதாகும். சில வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலும் தீர்வு எட்டப்படாத நிலையில் உள்ளன.

மொத்தம் உள்ள 42 லட்சத்து 69 ஆயிரம் வழக்குகளில் 50 சதவீதம் 5 ஆண்டில் இருந்து 10 ஆண்டு வரை தேங்கி கிடக்கும் வழக்குகளாகும்.

நாட்டிலேயே பெரிய ஐகோர்ட்டாக அலகாபாத் ஐகோர்ட்டு உள்ளது. இங்குதான் வழக்கு தேக்கமும் மிக அதிகமாக இருக்கிறது. அங்கு 2 லட்சத்து 67 ஆயிரம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேல் தேங்கி கிடக்கின்றன. இது இந்த கோர்ட்டில் உள்ள மொத்த வழக்குகளில் 38 சதவீதம் ஆகும்.

இதேபோல பம்பாய் ஐகோர்ட்டு, பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு, கொல்கத்தா, ராஜஸ்தான், மத்தியபிரதேஷ், தெலுங்கானா மற்றும் ஆந்திராபிரதேசம், மெட்ராஸ் ஐகோர்ட்டு, ஒரிசா, பாட்னா ஐகோர்ட்டு ஆகியவற்றிலும் 10 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகள் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன.

இதன்படி பம்பாய் ஐகோர்ட்டில் 1 லட்சத்து 45 ஆயிரம் வழக்குகளும், பஞ்சாப் அரியானா ஐகோர்ட்டில் 1 லட்சத்து 8 ஆயிரம் வழக்குகளும், கொல்கத்தா ஐகோர்டில் 93 ஆயிரம் வழக்குகளும், ராஜஸ்தானில் 70 ஆயிரம் வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 65 ஆயிரம் வழக்குகளும், தெலுங்கானா ஆந்திரா ஐகோர்ட்டில் 51 ஆயிரம் வழக்குகளும், சென்னை ஐகோர்ட்டில் 51 ஆயிரம் வழக்குகளும், ஒரிசா ஐகோர்ட்டில் 39 ஆயிரம் வழக்குகளும், பாட்னா ஐகோர்ட்டில் 23 ஆயிரம் வழக்குகளும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தேங்கியுள்ளன.

அனைத்து ஐகோர்ட்டுகளிலும் சேர்த்து ஒவ்வொரு மாதமும் 1 லட்சத்து 24 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆனால் இதில் 8 ஆயிரம் வழக்குகள் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு மேலாக தேக்கமடைந்த வழக்குகளாகும். அதாவது இந்த வகையான வழக்குகளில் 6 சதவீதம் மட்டும் ஒவ்வொரு மாதமும் தீர்வு காணப்படுகிறது.

வழக்குகளை அடிக்கடி ஒத்திவைப்பதால் விசாரணை முடிப்பதற்கு தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. கோர்ட்டு வழக்கில் சிவில், கிரிமினல் நடைமுறை விதிகள்படி ஒரு வழக்குக்கு 3 தடவைக்கு மேல் ஒத்திவைக்கக்கூடாது. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஒத்திவைப்பது அதிகரித்து வருகிறது. இதனால் தான் வழக்கு தேக்கம் மிக அதிகமாக இருப்பதாக சட்டத்துறையை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

வழக்குகள் தேக்கத்தை தடுப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதற்காக சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் அடிக்கடி ஆய்வு செய்து வழக்குகளை வேகமாக முடிக்க உத்தரவிடுகிறார்கள். ஆனாலும் அவை தேக்கமடைந்து வருகின்றன.

கீழ் கோர்ட்டுகளில் உரிய முடிவுகள் எட்டப்படாமல் அவை அப்பீலுக்கு வருவதன் மூலம் தொடர்ந்து இவ்வாறு அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.

வழக்குகள் தேக்தக்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு கோர்ட்டில் வழக்குகள் தீர்வு எண்ணிக்கை சம்பந்தமான விவரங்களை டிஜிட்டல் போர்டு மூலம் வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடி ஆலோசனை வழங்கி இருந்தார். இதன்படி மத்திய சட்டத்துறையில் வழக்குகள் பற்றிய விவரங்கள் அடங்கிய டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

இப்போது அனைத்து ஐகோர்ட்டுகளிலும் இதேபோல டிஜிட்டல் போர்டு வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய சட்டத்துறை இணை மந்திரி பி.பி. சவுத்ரி கூறினார். இந்த டிஜிட்டல் போர்டுக்கு ஜஸ்டிஸ் கிளாக் என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும், அதில் ஒவ்வொரு நாளும், முடிவு எட்டப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோர்ட்டில் வழக்குகள் அதிக அளவில் தேங்கி கிடப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில், நீண்டகாலமாக தேங்கி கிடக்கும் வழக்குகளால் நீதி அமைப்பே சீர்குலைந்து கிடக்கிறது என்று குற்றம்சாட்டி இருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 5 =

*