;
Athirady Tamil News

நாகர்கோவில்: ஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை..!!

0

நாகர்கோவில் கோட்டார் சவுராஷ்டிரா வேம்படி தெருவை சேர்ந்தவர் அய்யாவு என்ற முருகன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி நித்யா (வயது 28). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 மாதங்கள்தான் ஆகிறது. நித்யாவுக்கு ஏற்கனவே வேறு ஒரு வாலிபருடன் திருமணம் நடந்திருந்தது. அவரை பிரிந்து முருகனை 2-வதாக திருமணம் செய்திருந்தார்.

இந்தநிலையில் நித்யாவுக்கு சமீபகாலமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இதனால் கடும் அவதிக்குள்ளான அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் வயிற்றுவலிக்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகாததால் நேற்று மாலை நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.

அந்த ஆஸ்பத்திரியில் உள்ள 2-வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்து நித்யா சிகிச்சை பெற்றுவந்தார். அவருடன் மாமியார் மற்றும் சில உறவினர்கள் தங்கி அவரை கவனித்துவந்தனர். நேற்று நள்ளிரவு மாமியார் விழித்து பார்த்தபோது படுக்கையில் நித்யா இல்லாததால் அவரை தேடினார். ஆனால் நித்யா எங்கு சென்றார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபற்றி அந்த ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும் அவர் தகவல் தெரிவித்தார். அவர்களும் தேடிப்பார்த்தனர். ஆனால் நித்யா கிடைக்கவில்லை. நள்ளிரவு என்பதால் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்கள் இருந்துவிட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை அந்த ஆஸ்பத்திரியின் பின்புறம் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டின் பின்பகுதியில் உள்ள குளியல் அறைக்கு சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தண்ணீர் பிடித்து வைக்க பயன்படும் பெரிய பாத்திரத்திற்குள் ஒரு பெண் பிணமாக கிடப்பதை பார்த்தனர்.

இதுபற்றி கோட்டார் போலீசுக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர். இதற்குள் இந்த தகவல் பரவியதால் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டார் போலீசாரும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற நித்யா மாயமாகி இருந்த தகவல் தெரியவந்தது. அந்த ஆஸ்பத்திரியில் இருந்த நித்யாவின் உறவினர்களை அழைத்து வந்து காட்டியபோது பிணமாக கிடந்தது நித்யாதான் என்பது தெரியவந்தது

போலீசார் நித்யாவின் உறவினர்களிடம் விசாரித்த போது நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டு விழித்து பார்த்தபோது நித்யா மாயமாகி இருந்ததாகவும், அவரை தேடியபோது கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் ஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வயிற்று வலி காரணமாக அவர் இந்த தற்கொலை முடிவை எடுத்தாரா? அல்லது அவரது மரணத்துக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*