;
Athirady Tamil News

தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி..!!

0

தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

விஞ்ஞானிகள் தரப்பில் ஆதரவு தெரிவித்தாலும், பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில் மத்திய அரசு தமிழகத்தில், மக்களிடம் கருத்து கேட்காமலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்காமலும் நியூட்ரினோ திட்டத்தை அமல்படுத்த பார்க்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றார்.

இந்நிலையில் தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. சுற்றுச்சுழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரையை ஏற்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. திட்டத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் 340 கி.லி. தண்ணீரை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நியூட்ரினோ திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு இருந்தால் 30 நாட்களுக்குள் பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 6 =

*