;
Athirady Tamil News

விண்வெளிக்கு முதன்முதலில் பயணம் செய்த யூரி ககாரின் இறந்த தினம்: மார்ச் 27-1968..!!

0

யூரி அலெக்சியேவிச் ககாரின்விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக்- 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934-ல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் கடமையாற்றியவர்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955-ல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot’s School)-ல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957-ல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.

1960-ல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தேர்வு செய்யப்பட்டார்.

ககாரின் ஏப்ரல் 12, 1961-ல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில், நெடுஆரம் 203 மைல், குறுஆரம் 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.

இவர் 1968-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி மரணம் அடைந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − five =

*