நவீன தொழில்நுட்ப தீமைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு..!!

நவீன தொழில்நுட்பத்தின் தீமைகளிலிருந்து தற்கால சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (28) முற்பகல் தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற அசம்பாவித நிகழ்வுகளைத் தொடர்ந்து முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் குறித்து நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அது ஊடக சுதந்திரத்தை அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற ஒன்றாக அல்லாமல் சந்தர்ப்பத்தை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானமாகும் என தெரிவித்தார்.
அதன் மூலம் நாட்டில் ஏற்படவிருந்த பாரிய அழிவுகளை தடுக்க முடிந்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அரசாங்கம் மேற்கொண்ட அந்த தீர்மானம் சர்வதேச அமைப்புகளின் பாராட்டைப் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
சமூகத்தில் நிலவும் பல்வேறு சவாலான நிலமைகளில் இருந்து நாட்டின் சிறுவர் தலைமுறையைப் பாதுகாத்து அவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான வழிகள் குறித்த அறிவை வழங்குவதற்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கம் என்றவகையில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு பணிகள் உள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படுகின்றபோது சில பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ள கவலையான நிகழ்வுகளைக் கருத்திற்கொண்டு பரீட்சைகளுக்கு பிள்ளைகளை தயார்படுத்துவது போன்று பெற்றோரையும் தயார்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.