கல்விக்கு வயதில்லை- 44 வயதில் மகனுடன் இணைந்து 10 வகுப்பு தேர்வு எழுதும் தாய்..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த ரஜ்னி பாலா என்ற பெண் அரசு மருத்துவமனையில் வார்டு உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பள்ளி படிப்பை 9-ம் வகுப்புடன் நிறுத்தினார். அதற்கு மேல் அவரால் படிக்க முடியவில்லை.
திடீரென 18 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. இதனால் தனது வேலைக்கு சிறிய இடைவேளை விட்டு பள்ளியில் சேர்ந்தார். 10-ம் வகுப்பு படிக்கும் தனது மகனுடன் சேர்ந்து பள்ளி மற்றும் டியூசனுக்கு சென்று படித்து வந்தார். தொடக்கத்தில் சிறிது தயக்கமாக இருந்தாலும் பிறகு மகிழ்ச்சியாக கல்வி பயின்றார்.
10-வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில் தனது மகனுடன் இணைந்து தேர்வு எழுதினார். குடும்பம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் பலருக்கு ரஜ்னி ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.
இதுகுறித்து பேசிய ரஜ்னி பாலா, நான் மீண்டும் பள்ளிக்கு சென்று படிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நன்றாக படித்து ஹிந்தி அல்லது வேறு ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் வாங்க விரும்புகிறேன். என் கணவர், குழந்தைகள் மற்றும் என் மாமியார் எனக்கு உறுதுணையாக உள்ளனர்.
கல்விக்கு வயதில்லை என்பதற்கு 44 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி ரஜ்னி பாலா அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.