2019-ம் நிதி ஆண்டுக்கான அமெரிக்க விசாவுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!

அமெரிக்க நாட்டின் குடியுரிமையைப் பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை பார்ப்பதற்கு வழங்கப்படுகிற விசா, ‘எச்-1 பி’ விசா ஆகும்.
அமெரிக்க நிறுவனங்கள், தங்களுக்கு தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தேவைப்படுகிற பணியாளர்களை அமர்த்திக்கொள்வதற்கு ‘எச்-1 பி’ விசாக்களை பயன்படுத்துகின்றன. அந்த வகையில் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள், இந்த விசாக்களின் மூலம் பணி அமர்த்தப்படுகின்றனர்.
3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய இந்த ‘எச்-1 பி’ விசா வழிவகை செய்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும், அமெரிக்கா 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசா வழங்குகிறது.
அமெரிக்காவில் அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிற 2019-ம் நிதி ஆண்டுக்கான விசாக்களை பெறுவதற்கு, விண்ணப்பிப்பதற்கான நடைமுறை இன்று (2-ந் தேதி) தொடங்குகிறது.
இது 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு யு.எஸ்.சி.ஐ.எஸ். வெளியிட்டு உள்ளது.
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையில் உறுதியாக உள்ளார். இதனால் அங்கு வெளிநாட்டினர் வேலை செய்வதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.
விண்ணப்பங்களில் ஒரு சிறு குறை கூட பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என கூறப்படுகிறது.
அதிகபட்ச அளவிலான விண்ணப்பங்களை நிராகரிப்பதில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு அக்கறை காட்டுவார்கள் என சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் தகவல் தெரிவித்து உள்ளனர்.
முந்தைய ஆண்டுகளில் நகல் விண்ணப்பங்களை (டூப்ளிகேட் அப்ளிகேஷன்) கம்பெனிகள் அளிக்கிற நடைமுறை இருந்ததால், வழக்கமாக நடைபெற்ற குலுக்கலில் விசா கிடைப்பதற்கு விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு அதிக அளவில் இருந்தது.
ஆனால் இந்த முறை இத்தகைய நகல் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உட்பட்டவை என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு எச்சரித்து உள்ளது.
விசா விண்ணப்பங்களை பெறுகிற காலகட்டத்தில், பிரிமியம் பிராசசிங் என்னும் சிறப்பு பரிசீலனையை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இந்த பிரிமியம் பிராசசிங் நடைமுறை எப்போது தொடங்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு கூறுகிறது.
2019 நிதி ஆண்டுக்கான விசாதாரர்களை தேர்வு செய்வதற்கு வழக்கம் போல கம்ப்யூட்டர் லாட்டரி குலுக்கல் முறை பின்பற்றப்படுமா என்பது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு எந்த தகவலும் வெளியிடவில்லை.
இந்த முறை ‘எச்-1 பி’ விசா விண்ணப்பதாரர், பயனாளியின் செல்லுபடியாகத்தக்க பாஸ்போர்ட் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews #H1BVisa