;
Athirady Tamil News

நம்பிக்கையில்லாப் பிரேரணை; கூட்டமைப்புக்குள்ளும் கருத்து முரண்பாடு?..!!

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானமே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தீர்மானமாக இருக்குமென, அந்த கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு இடையில் இன்றும் நாளையும் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான விடயத்தில், கூட்டமைப்பிற்கும் சில கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்டின் நிலைப்பாடு தொடர்பில் வினவியது போது. இதற்கு பதிலளித்த சித்தார்த்தன் எம்.பி “இன்றும் நாளையும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். இதன் பின்னர் கூட்டமைப்பு ஏகமனதாக எடுக்கும் தீர்மானத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக, பிரதமருக்கு ஈபிஆர்எல்எப் அனுப்பிவைத்துள்ள கடிதத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்துக்கான பதிலைப் பொறுத்தே, பிரேரணை தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியுமென அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈபிஆர்எல்எப் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியிருந்தாலும், அந்த கட்சிக்கு காணப்படும் நாடாளுமன்ற உறுப்புரிமையானது கூட்டமைப்பின் ஊடாகவே பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் பின்னர், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − six =

*