;
Athirady Tamil News

நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா மரணம்..!!

0

தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் 8-7-1918 பிறந்த நெல்சன் மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள “நெல்சன்” இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.

1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

அப்போது ‘நோமதாம் சங்கர்’ என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958-ம் ஆண்டு ‘நோம்ஸாமோ வின்னிபிரெட் மடிக்கிசேலா’ என்பவரை மணந்தார்.

மண்டேலா 1962-ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. வின்னியும் தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி சிறைவாசம் அனுபவித்தார்.

பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்த தென்னாப்பிரிக்க அரசாங்கம் வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனைவி வின்னியை சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988-ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்ற நெல்சன் மண்டேலா பின்னர் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1990-ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

1994 மே 10-ந்தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998-ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கருப்பின அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999-ல் பதவியை விட்டு விலகினார்.

இவரது ஆட்சிக் காலத்தின்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வின்னி மண்டேலா தென்னாப்பிரிக்க நாட்டின் கலை மற்றும் கலாசாரத்துறை இணை மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தார். தனது பதவிக்காலத்தின்போது 1994-ம் ஆண்டில் அதிகாரபூர்வமற்ற முறையில் கானா நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற வின்னியை மந்திரி பதவியில் இருந்து நீக்கிய நெல்சன் மண்டேலா 2-வது முறை அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 5-12-2013 அன்று நெல்சன் மண்டேலா காலமானார்.

இதற்கிடையே, 37 ஆண்டுகாலை தாம்பத்திய வாழ்க்கையில் இரு குழந்தைகளுக்கு தாயாகி, பொது வாழ்க்கையில் கணவருடன் சேர்ந்து பல்வேறு வேதனைகளை அனுபவித்த வின்னி மண்டேலா கருத்து வேறுபாடு காரணமாக நெல்சன் மண்டேலாவிடம் இருந்து கடந்த 1996-ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.

அதன் பின்னர் வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே அடுத்தடுத்து பதவிவகித்த வின்னி மண்டேலா, சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஜோகனஸ்பர்க் நகரில் உள்ள நெட்கேர் மில்பார்க் மருத்துவமனையில் (உள்ளுர் நேரப்படி) வின்னி என்றழைக்கப்படும் நோம்ஸாமோ வின்னிபிரெட் மடிக்கிசேலா மண்டேலா தனது 81-வது வயதில் இன்று காலமானார். #WinnieMandela #TamilNews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + seventeen =

*