சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெறுவேன்- சசிகலா புஷ்பா..!!

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்று சசிகலா புஷ்பா எம்.பி. கூறினார்.
சமீபத்தில் ராமசாமி என்பவரை மறுமணம் செய்து கொண்ட சசிகலா புஷ்பா எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் மறுமணம் செய்து கொண்டதை சிலர் கிண்டல் செய்கிறார்கள். நான் தைரியமானவள். இப்போதுதான் எனக்கு 41 வயது ஆகிறது.
இன்னும் நீண்ட வாழ்க்கை இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ள நான் கோழை அல்ல. மீதம் உள்ள வாழ்க்கையை நிம்மதியாக, நேர்மையாக கழிக்க விரும்புகிறேன்.
சசிகலாவை முன்பு நான் கடுமையாக விமர்சித்தது உண்மைதான். அரசியலில் இது சகஜம். ஓ.பன்னீர்செல்வம் நல்லவர் என்று நினைத்து முன்பு அவரை ஆதரித்தேன். ஆனால் அவர் பதவிக்காகத்தான் வாழ்கிறார் என்பது புரிந்தது. பிறகு எடப்பாடி பழனிசாமி நல்லவர் என்று நினைத்தேன். அவரும் பதவிக்காக காலில் விழுந்த சசிகலாவுக்கே துரோகம் செய்தார். இவர்களுடன் ஒப்பிடுகையில் சசிகலா மிகவும் நல்லவர். சிறையில் கஷ்டப்படுகிறார்.
தினகரனின் செயல்பாடு எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. அவருக்கு தலைவரான சசிகலா எனக்கும் தலைவர் தான். எங்கள் திருமணத்துக்காக சசிகலாவுக்கு பத்திரிகை வைக்க விரும்பினோம். ஆனால் எங்கள் திருமணத்தை கிண்டல் செய்து மனஉளைச்சல் கொடுத்து விட்டார்கள். ஆகவே திருமண பத்திரிகையை யாருக்கும் கொடுக்கவில்லை. விரைவில் பெங்களூரு சென்று சிறையில் சசிகலாவை சந்தித்து நானும், எனது கணவரும் வாழ்த்து பெறுவோம்.