;
Athirady Tamil News

சித்தராமையா அரசுக்கு 10-ல் 7 பேர் ஆதரவு – கருத்து கணிப்பில் தகவல்..!!

0

கர்நாடகா மாநிலத்தில் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி எப்படி இருந்தது என்று ஜனநாயக சீர்திருத்த கழகம் என்ற அமைப்பு ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளிலும் இந்த சர்வே நடத்தப்பட்டது.

13 ஆயிரத்து 244 பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது.

இந்த கருத்து கணிப்பில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது 10 வாக்காளர்களில் 7 வாக்காளர்கள் சித்தராமையா ஆட்சி மீது திருப்தியை வெளியிட்டுள்ளனர்.

கிராமப்புற வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கல்வித்துறையில் வேலை வாய்ப்பு, மின் சப்ளை, உணவு வினியோக மானியம் கிடைப்பது சரியாக நடந்து வருவதாக கூறினார்கள். ஆனால் வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் ஒழிப்பு, நல்ல குடிநீர் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

எம்.எல்.ஏ.யைப் பார்த்து குறைகளை சொல்ல முடியவில்லை என்று கணிசமான கிராமப்பகுதி மக்கள் கருத்து கூறியுள்ளனர்.

நகர்ப்பகுதி வாக்காளர்கள் மின் வினியோகம், போக்குவரத்து சீராக, சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் ஊழல் ஒழிப்பு மற்றும் பொது சுகாதாரம் சிறப்பாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

சித்தராமையாவின் செயல்பாடு நன்றாக இருந்ததாக 37 சதவீதம் பேர் கூறியுள்ளனர். முதல்-மந்திரி வேட்பாளரை பொருத்தே எந்த கட்சிக்கு வாக்களிப்போம் என்று 67 சதவீதம் பேர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*