;
Athirady Tamil News

மத்திய அரசின் எடுபிடியாக நடக்கிறது தமிழக அரசு – நடிகர் கமல்ஹாசன் தாக்கு..!!

0

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திருச்சியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி திருச்சி பொதுக்கூட்டம் பற்றி அறிவித்து இருந்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் தற்போது ஏற்கனவே 2016-ல் நடந்த நிகழ்வுகள் ஞாபகத்துக்கு வருகின்றன. அப்போது உச்ச நீதிமன்றம் 4 வாரத்துக்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அப்போதும் சட்ட நுணுக்கங்களை தயாரித்து சாக்கு போக்கு காட்டி அது தாமதிக்கப்பட்டது. இப்போதும் அதே நாடகம் அரங்கேறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. ஆனால் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோ, போலியான ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோ தமது இயலாமைகளை மறைக்க முடியாது. மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடிகள் போன்று நடக்கிறது இந்த தமிழக அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதே?.

பதில்:- திருத்தம் கொண்டுவரக்கூடாது. இதுபற்றி நான் ஏற்கனவே கருத்து கூறி இருக்கிறேன்.

கேள்வி:- உங்கள் ரெயில் பயணம் மக்களுக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறதே?.

பதில்:- அப்படி இல்லை. அது நடக்காமல் இருப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தோம். எல்லா பெட்டிகளுக்கும் சென்று பயணிகளுடன் உரையாட வேண்டும் என்று விருப்பமாக இருந்தது. ஆனால் மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று அதனை தவிர்த்துவிட்டோம். இதற்கு முன்பும் இவ்வாறு ரெயிலில் பயணம் செய்துள்ளேன். அப்போது அதனை யாரும் பெரிதுபடுத்தவில்லை. இப்போது அரசியல்வாதியானதால் அரசியல் தலையிடுகிறது. அவ்வளவு தான்.

கேள்வி:- நீங்கள் மத்திய அரசை விமர்சனம் செய்வது குறைவாக இருக்கிறது. மாநில அரசையே அதிகம் தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?.

பதில்:- உங்களுக்கு தமிழில் சொன்னது புரியவில்லை என்றால் ஆங்கிலத்தில் சொல்கிறேன். ஆங்கிலத்தில் சொன்னது புரியவில்லை என்றால் தமிழில் சொல்கிறேன். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் கூறி இருந்தேன். இங்குள்ள முதல்வரை பற்றி கூட நான் ஒருமையில் பேசுவது கிடையாது. எப்போதுமே அப்படித்தான். அதற்காக என்னுடைய விமர்சனம் குறைந்த காரத்தில் உள்ளது என்று நீங்கள் நினைக்கக்கூடாது. குரல் குறைந்துவிட்டது என்பது ஒருவித நாடகத்தன்மை. அதுதேவையில்லை. வெள்ளையனே வெளியேறு என்று சொல்வதற்கு பதிலாக டேய் வெளியே போடா என்று சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நான் சொல்லமாட்டேன்.

கேள்வி:- காவிரி விவகாரம் தொடர்பாக திரைஉலகம் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்வீர்களா?.

பதில்:- அது என் உலகம். கண்டிப்பாக கலந்துகொள்வேன்.

கேள்வி:- ஸ்டெர்லைட், காவிரி போன்ற மக்கள் பிரச்சினைக்காக நடத்தப்படும் போராட்டங்களில் நீங்கள் விருந்தினர் போல் கலந்துகொள்வதாக குற்றம் சுமத்தப்படுகிறதே?.

பதில்:- இது மக்கள் நீதி மய்யம். என் நீதி மய்யம் அல்ல.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*