;
Athirady Tamil News

சாவகச்சேரி கன்னி அமர்வில் பல திட்டங்கள் முன்மொழிவு..!!

0

சாவகச்சேரி நகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் கன்னி அமர்வு நேற்று நகரசபை, சபா மண்டபத்தில் தவிசாளர் சிவமங்கை இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதித் தவிசாளர் அ.பாலமயூரன் உட்பட சபையின் 18 உறுப்பினர்களும் கன்னி அமர்வில் கலந்து கொண்டனர்.

”சபையில் எடுக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களும் அனைத்து உறுப்பினர்களின் சம்மதம், பங்களிப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்படல் வேண்டும். உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு உறுப்பினர்கள் அனைவரும் முன்வந்து அதனைப் பார்வையிட வேண்டும்.

அதன் தார்ப்பரியத்தை உணர்ந்து அதன் முக்கியத்துவத்தை சபைக்குத் தெரியப்படுத்தி மேற்கொள்ளல் அவசியமாகும். சபையின் செயற்பாடுகளால் வடமாகாணத்தில் முன்னுதாரணமான நகரசபையாகத் திகழச் செய்யவேண்டும்” என்று தவிசாளர் தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

”சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வதியும் கிராமம் காலம் காலமாக ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளது. எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்கின்றனர். முன்னைய காலங்களில் அக் கிராமம் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் எமது சபை அந்தக் கிராமத்தின் அபிவிருத்திக்கு முன்னின்று செயற்பட வேண்டும்” என சுயேட்சைக் குழு உறுப்பினர் க.சிவராசா கேட்டுக் கொண்டார்.

அப்போது உரையாற்றிய தமிழ்த் தேசிய முன்னணியின் உறுப்பினர் சு.நிதிகேசன் ”கடந்த வருடம் பெய்த மழையின் போது கிராமத்தில் வசிக்கும் மக்கள் அங்குள்ள சனசமூக நிலையத்தில் தங்கியிருந்ததனர். இதனைப் பார்வையிட்ட நாம் பெரிதும் கவலை கொண்டோம். சபையின் உறுப்பினராக இல்லாத நிலையில் எனது சொந்தச் செலவில் மழை வெள்ளம் நின்ற பகுதியில் மண்போட்டு மழை வெள்ளம் தேங்காமல் செய்தோம் என்றார்.

அமர்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் சபையின் தொழிலாளர் வதியும் கிராமத்தை முன்னரிமைப்படுத்தி அபிவிருத்தி செய்யவேண்டுமெனவும் அதற்க அனைவரும் ஒத்தழைப்பு நல்குவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் க.கஜிதன் அனைத்து உறுப்பினர்கள் நகரசபை அலுவலர்கள் மற்றும் ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள பொது அமைப்புகளுடன் ஒன்றிணைந்து நாளை (இன்று) சிரமதானம் மேற்கொள்ளவேண்டுமெனத் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட சபையினர் கிராமத்தில் சிரமதானம் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + seventeen =

*