;
Athirady Tamil News

கர்நாடக விவசாயிகளின் கடனை ரத்து செய்ய மறுத்தவர், பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

0

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகம் வந்தார். அவர் நேற்று மதியம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள நகரசபை மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்தியில் ராகுல் காந்தி பேச அதனை ஹரிபிரசாத் எம்.பி. கன்னடத்தில் மொழி பெயர்த்தார். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

“பசவண்ணர் நாம் என்ன சொல்கிறோமோ அதை செய்து காட்ட வேண்டும் என்று ஒரு மந்திரத்தை கூறியிருந்தார். அவர் கூறிய மந்திரத்தின் படி காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பெங்களூரு நகரம் பரிமாண வளர்ச்சி அடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் சித்தராமையா தரமான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு உள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம், ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் அவர் கூறிய வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை மட்டும் அளிக்க தான் அவருக்கு தெரியும். அதனை நிறைவேற்ற அவருக்கு தெரியாது.

அதுமட்டுமா? நாட்டின் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும், விவசாய பயிர்களுக்கு ஆதரவு விலை கொடுக்கப்படும் என்று எல்லாம் அவர் கூறினார். அதையும் அவர் செய்யவில்லை. நிரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோர் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். ஆனால் இதுபற்றி பிரதமர் மோடி இன்று வரை வாய் திறந்து பேசவில்லை. அவர் இனி மேலும் நிரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோருக்கு வங்கிக்கடன் கொடுப்பார்.

ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய அவரால் முடியாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை நான் சந்தித்து பேசிய போது உத்தரபிரதேசத்தில் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை மாநில அரசு தள்ளுபடி செய்து உள்ளது. அதுபோல கர்நாடகத்தில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் கர்நாடக விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுத்ததுடன், நான் விடுத்த கோரிக்கையையும் அவர் நிராகரித்துவிட்டார். அவருக்கு கர்நாடக விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை.

இருப்பினும் சித்தராமையா தலைமையிலான மாநில அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.8 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. மேலும் மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் தலா 7 கிலோ அரிசியை மாநில அரசு வழங்கி வருகிறது. மாநிலத்தில் இந்திரா உணவகம் தொடங்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

குஜராத்தில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள். அங்கு ஒரு குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்றால் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை குஜராத் முதல்-மந்திரி கண்டுகொள்ளவில்லை. ஆனால் கர்நாடக அரசு ஏழை, எளிய குழந்தைகளுக்கு இலவச கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசன சட்டத்தின்படி நடந்து கொள்வதாக பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். மேலும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் போது மிகவும் பவ்வியமான முறையில் நடந்து கொள்வது போல மக்கள் மத்தியில் நாடகமாடுகிறார்கள். மத்திய அரசுக்கு தலித், பழங்குடியின மக்கள் நலனில் துளியும் அக்கறை கிடையாது. அவர்கள் தலித், பழங்குடியின மக்களுக்கு நன்மை செய்ய கூடாது என்று நினைத்து உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகத்திற்கு வருகை தந்த அமித்ஷா தாவணகெரேயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ஊழல் மிகுந்த அரசு எடியூரப்பா அரசு என்று கூறினார். இதன் மூலம் அவர் வாயில் இருந்து நீண்ட நாட்கள் கழித்து உண்மை வந்தது. இதேப்போன்று கடந்த வாரம் மராட்டியத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது நாட்டிலேயே சிறந்த மாநிலம் கர்நாடகம் என்று கூறினார். இதன் மூலம் கர்நாடக மக்களுக்கு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நல்லாட்சி கொடுத்து உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. உண்மைக்கு மாறாக பேச அவர்களுக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. அவர்களுடைய எண்ணம் எல்லாம் ஏதாவது கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இந்துத்துவாவை புகுத்த நினைக்கிறார்கள். அது எடுபடாது. கர்நாடக சட்டசபை தேர்தலை தொடர்ந்து இந்த ஆண்டு நடக்க உள்ள பிற மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். அதேப்போல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி. பா.ஜனதாவை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்.

பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகி உள்ளது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தவிடாமல் சில கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற கூட்டம் நடந்தால் நிரவ் மோடி செய்து உள்ள வங்கி மோசடி பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்ற பயத்தில் மத்திய அரசு இவ்வாறு சில கட்சிகள் மூலம் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்துள்ளது.

எச்.ஏ.எல். நிறுவனத்திடம் இருந்து விமானம் கொள்முதல் செய்வதை விட்டுவிட்டு பிரான்சில் உள்ள நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு விமானத்தை கொள்முதல் செய்து வருகிறது. இந்த விமான கொள்முதலில் முறைகேடு நடந்து உள்ளது. இந்த முறைகேட்டில் மத்திய மந்திரி ஒருவருக்கும் தொடர்பு உள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசு 10 சதவீத கமிஷன் அரசு என்று மோடி கூறியுள்ளார். மேலும் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு என்று சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை விமர்சனம் செய்து உள்ளார். அவர் மேடையில் பேசும் போது தனது அருகே ஊழல் செய்தவர்களை வைத்து கொண்டு இவ்வாறு பேசி வருகிறார். தயவுசெய்து அவர் ஊழல் பற்றி பேசும் போது, ஊழல் செய்தவர்களை கீழே இறக்கி விட்டு பேச வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்காக நான் பல சாதனைகளை செய்து உள்ளேன் என்று பிரதமர் கூறி வருகிறார். உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ரத்து செய்து ஏழை, எளிய மக்களை வங்கியின் முன்பு நிற்க வைத்தது தான் அவர் செய்த மகத்தான சாதனை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + eight =

*