;
Athirady Tamil News

நச்சுத் தாக்குதலில் சிக்கி உயிர் பிழைத்த ரஷிய முன்னாள் உளவாளியை அமெரிக்காவுக்கு அனுப்ப திட்டம்..!!

0

ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பிரிட்டனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷியா தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என பிரிட்டன் கோரியது. அமெரிக்க அதிபர் டிரம்பும் இவ்விவகாரத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக உள்ளார்.

ஆனால், பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை மறுத்த ரஷியா, இது தொடர்பாக எந்த விளக்கத்தையும் தரவில்லை. இதனால், ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷியாவே பொறுப்பு என பிரிட்டன் உறுதியாக தெரிவித்தது.

இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் தெரசா மே, ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷிய அரசுதான் கொலைமுயற்சி குற்றவாளியாக அறிவித்தார்.

ரஷியா உடனான உயர்மட்ட தொடர்பை துண்டிக்க வேண்டும் என்ற பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை நான் ஏற்கிறேன். ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ராவ் பிரிட்டன் வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் திரும்ப பெறுகிறோம் என தெரசா மே கூறினார்.

பிரிட்டனில் உள்ள ரஷியா நாட்டு தூதரக அதிகாரிகள் 23 பேரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர் நடவடிக்கையாக ரஷியாவில் இருந்த பிரிட்டன் நாட்டு தூதர்களும் வெளியேற்றப்பட்டனர்.

பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள பல நாடுகள் ரஷிய தூதர்களை வெளியேற்றி விட்டன. ரஷியாவும் இதற்கு எதிர் நடவடிக்கை எடுத்துள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல்முறையாக தங்கள நாட்டு வீதியில் விஷ ரசாயனத் தாக்குதல் நடத்தி முன்னாள் உளவாளியை கொல்ல முயன்றதாக புதின் மீது பிரிட்டன் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் குற்றம்சாட்டினார். இது மூடத்தனமான கருத்து என்று புதின் மறுப்பு தெரிவித்திருந்தார்.

முன்னாள் உளவாளியை நாங்கள் கொல்ல முயன்றதாக கூறுவதை நிரூபிக்காவிட்டால் பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், லண்டன் மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த செர்ஜய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோரின் உடல்நிலை தேறி அவர்கள் குணமடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் புதிய பெயர் மற்றும் புதிய அடையாளத்துடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க பிரிட்டன் நாட்டு உளவு அமைப்பான எம்.16 தீர்மானித்துள்ளது. பிரிட்டன் அரசின் இந்த முடிவுபற்றி அமெரிக்க அரசு மற்றும் அந்நாட்டின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக ‘தி சன்டே டைம்ஸ்’ பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ள செர்ஜய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் தங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் தொடர்ந்து பங்கேற்று வாக்குமூலம் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அமெரிக்காவில் அவர்களுக்கு 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய சிறப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews #Russianspy #newidentities

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − twelve =

*