;
Athirady Tamil News

வீட்டுக்கு வரக்கூடாது என திட்டியதால் அக்காளை வெட்டி கொன்ற தம்பி..!!

0

கோவை உக்கடத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சங்கீதா(வயது 29). இவர்களுக்கு அத்தியாஸ்ரீ(8) என்ற மகள் உள்ளார்.

கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கோபித்துக் கொண்டு சங்கீதா மகளுடன் சிங்காநல்லூர் அருகே உப்பிலிபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

அக்காள் தனது கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு வீட்டுக்கு வருவது அவரது தம்பி சரவணகுமாருக்கு(27) பிடிக்க வில்லை. இதுதொடர்பாக சரவணகுமாருக்கும், சங்கீதாவுக்கும், இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தாய் மங்கையர்கரசி சரவணகுமாரை கண்டித்து வந்துள்ளார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேற்று மங்கையர்கரசி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த சங்கீதாவுக்கும், சரவணகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரவணகுமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது அக்காள் என்றும் பாராமல் சங்கீதாவை கழுத்தில் வெட்டி கொலை செய்தார். பின்னர் உடலை பெரிய சூட்கேசுக்குள் வைத்து மூடி மோட்டார் சைக்கிளில் வைத்து விமான நிலையம் பின்புறம் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

கொலை நடந்த போது சங்கீதாவின் மகள் அத்தியாஸ்ரீ வீட்டில் இருந்தார். தாயின் அலறல் சத்தம் கேட்டு அவர் வீட்டுக்குள் சென்ற போது அங்கு தாய் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது சரவணகுமார், அத்தியாஸ்ரீயிடம் வீட்டில் நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார்.

பின்னர் சங்கீதா உடலை எரிக்க எடுத்து சென்ற போது அத்தியாஸ்ரீயையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்றுள்ளார். சங்கீதா உடலை எரித்த பிறகு சூட்கேசை அங்கேயே போட்டு விட்டு அத்தியாஸ்ரீயை வீட்டில் விட்டு விட்டு சரவணகுமார் இருகூரில் உள்ள தனது பெரியம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.

மாலையில் மங்கையர்கரசி வீடு திரும்பிய போது அத்தியாஸ்ரீ மட்டும் தனியாக அழுது கொண்டிருந்தார். அவரிடம் அம்மாவை ஏங்கே? என கேட்டபோது நடந்த சம்பவங்களை கூறினார். அதிர்ச்சியடைந்த மங்கையர்கரசி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இருகூரில் பதுங்கியிருந்த சரவணகுமாரை கைது செய்தனர். சங்கீதா உடல் எரிக்கப்பட்ட இடத்துக்கு போலீசார் சென்ற போது அங்கு தலை மட்டும் எரியாமல் இருந்தது. மீதமுள்ள பகுதிகள் எரிந்து கரிக்கட்டையாகி இருந்தது. இதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட சரவணகுமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது அக்காள் சங்கீதா அடிக்கடி அவரது கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுவார். இதனால் நான் அவரை கண்டித்தேன். அப்போது நீ எப்படி என்னை கேள்வி கேட்கலாம் என என்னுடன் சண்டைபோட் டார்.

எனக்கும் அக்காளுக்கும் அடிக்கடி சண்டை வந்ததால் எனது தாய் என்னிடம் நீ இருகூரில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு சென்று தங்கி கொள் என கூறினார். என் வீட்டில் தங்குவதற்கு எனது அக்காள் இடையூறாக இருந்தது எனக்கு வேதனையாக இருந்தது.

நேற்று தாயை பார்க்க சென்றேன். அதற்குள் அவர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அக்காள் நீ ஏன் இங்கு வந்தாய்? என சத்தம் போட்டார். என்னை வீட்டுக்குள் வரக்கூடாது என கூற உனக்கு என்ன உரிமை உள்ளது? என நான் அவளை கண்டித்தேன். அப்போது அக்காள் திமிராக பேசியது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அப்போது கீழே கிடந்த அரிவாளை எடுத்து வெட்டிக் கொலை செய்தேன். உடலை வீட்டில் வைத்தால் மாட்டிக் கொள்வேன் என நினைத்து பெரிய சூட்கேசுக்குள் வைத்து மூடி வெளியே எடுத்து சென்று எரித்தேன். ஆனால் தற்போது சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கைதான சரவணகுமார் மீது கொலை, தடயங்களை அழித்தல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், உடலை எடுத்து சென்ற சூட்கேஸ் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*