மால்டாவில் இரட்டை அடுக்கு பேருந்து விபத்தில் 2 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு..!!

மால்டா நாட்டின் தலைநகரான வேலெட்டா நகரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் சுரேக் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில், ஒரு இரட்டை அடுக்கு பேருந்து சாலை ஓரமாக இருந்த மரத்தின் கிளைகளில் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் மேல் அடுக்கில் பயணம் செய்த இரண்டு சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் எனவும், மற்றொருவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் கிரேனின் உதவியுடன் பேருந்தின் மேல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர். அப்பகுதியில் சமீபத்தில் வீசிய அதிக காற்று காரணமாக மரத்தின் கிளைகள் வழக்கத்தைவிட தாழ்வாக இருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.