;
Athirady Tamil News

மகாவலி அதிகாரசபை வன்னி தமிழருக்கு ஆக்கிரமிப்பு சபையாக மாறியது…!!

0

மகாவலி அதிகாரசபை வன்னி தமிழருக்கு ஆக்கிரமிப்பு சபையாக மாறியது – வன்னி எம்.பி சி.சிவமோகன் சீற்றம்

காமினி திசாநாயக்க மகாவலி அமைச்சராக இருந்தபோது சிங்கள மக்களுக்கு விவசாய அபிவிருத்திக்கென ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு காலப்போக்கில் தமிழர் பிரதேச ஆக்கிரமிப்பு சபையாக மாறியது.

அரசியல் அமைப்பில் 13வது திருத்தம் மூலம் காணி அதிகாரம் தமிழருக்கு வழங்கப்படுவதாக போக்குக்காட்டிய பேரினவாதம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினூடாக கண்மூடித்தனமான நில ஆக்கிரமிப்பை வன்னி பிரதேசத்தில் செய்யத் தொடங்கியது.

காணி ஆக்கிரமிப்பு சிங்கள ஆக்கிரமிப்பாக பின்னர் உருவம் பெற்றது. ஜனகபுர, கல்யாணபுர என பல சிங்கள கிராமங்கள் தோன்றியது. தமிழரின் மணலாறு என்ற பூர்வீக பிரதேசம் வெலிஓயா என சிங்கள ஆக்கிரமிப்பு அடையாளமாகியது.

விடுதலைப்புலிகளின் ஈழ விடுதலைப்போராட்டம் சிங்கள குடியேற்றங்களை 2009வரை தடுத்து நிறுத்தியது.

இன்று மீண்டும் சிங்கள தேசம் தனது நயவஞ்சகத்தனத்தை காட்டத்தொடங்கியிருக்கிறது. கொடூர குற்றங்களை புரிந்த சிங்கள காடையர்களை குடியேற்றம் செய்ய வெலிஓயா பயன்படுத்தப்பட்டது.

சிறையில் அடைக்கப்படவேண்டிய குற்றவாளிகளின் திறந்தவெளி சிறைச்சாலையாக தமிழர் பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட தொடங்கியுள்ளது துரதிஸ்டம்.

இன்று மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டின் கீழ் மீண்டும் காணி அபகரிப்பு நிகழ்ச்சி நிரல் ஆரம்பமாகியுள்ளது.

தமிழர்களின் வாக்குகளில் அரியணை ஏறிய மைத்திரிபால சிறிசேன ஒன்றும் புரியாத பொம்மைபோல் சிங்கள ஆக்கிரமிப்பு முல்லைத்தீவில் நடைபெற வழிவிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் முகத்துக்குமுன் மகாவலி அராஜகம் பற்றி நான் எடுத்துரைத்தபோதும் கூட ஒன்றும் புரியாதவர் போல் செவிமடுக்கின்றார்.

பாராளுமன்ற குழுவாக சென்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெளிவுபடுத்தியபோது பார்க்கலாம் என்று தமது நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த முயல்கிறார்கள்.

ஆயுத போராட்டம் கொடுத்த பாடத்தை மறந்து இன்று தமிழரின் காணி உரிமையில் கைவைக்க துணைபோவதை என்னவென்று சொல்வது. 13வது திருத்தத்தை கொண்டுவந்த இந்திய அரசுக்கு கூட, விடுதலைப்புலிகளின் போராட்டம் ஒடுக்கப்பட்டபின் அவர்களது பொறுப்புக்கூறலை கைவிட்டுவிட்டது. இன்று தமிழரை உரிமைகளற்ற ஏதிலிகள் இனமாக்கிவிட்டது எனத் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 9 =

*