;
Athirady Tamil News

ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது – பிரதமர் மோடி பேச்சு..!!

0

திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

தற்போது தொடங்கி இருக்கும் ராணுவ தளவாட கண்காட்சி 10-வது கண்காட்சியாகும். அதுமட்டு மல்ல தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது கண்காட்சியாகும். சோழர்கள் ஆண்ட இந்த பகுதியில் நடைபெறும் இந்த கண்காட்சியில் நீங்கள் கூடியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இதில் 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்களும், 125-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

வாஜ்பாய் ஆட்சியின்போது தான் ராணுவ தளவாட உற்பத்தி துறையில் தனியார் பங்களிப்பு தொடங்கி வைக்கப்பட்டது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட தளவாட உற்பத்தி குறுகிய காலத்திலேயே இமாலய வளர்ச்சியை அடைந்துள்ளது. இது இந்தியாவின் பெருமையாகும்.

ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறி உள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிற அளவில் நாம் முன்னேறி உள்ளோம்.

ராணுவ தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி நமது ராணுவம் நன்கு அறிந்துள்ளது. இன்று மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் உள்நாட்டில் ஆயுத உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நமது நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலும் உத்தரப்பிரதேசத்திலும் ராணுவ தளவாட தொழிற்சாலை வழித்தடங்கள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் தொழில்துறை மேம்படும், வேலை வாய்ப்பு பெருகும். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் ஆப் இந்தியா ஆகிய திட்டங்களின் கீழ் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறோம்.

பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்கு முன்பு வெளிநாட்டை நம்பி இருந்தோம். இப்போது நாம் ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறி உள்ளோம்.

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி மதிப்பிலான 794-க்கும் அதிகமான வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர்கள் பெற்றுள்ளோம்.

உலகுக்கு அகிம்சையை நம் நாடுதான் போதித்தது. நாம் அமைதியை விரும்பினாலும் நாட்டு மக்களை காக்க எல்லையில் ராணுவம் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. நாம் ஒருபோதும் இறையாண்மையை மீறி ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டது இல்லை.

வெளிநாடுகளில் நாம் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதை தாண்டி நம்மிடம் மற்ற நாடுகள் கொள்முதல் செய்ய வேண்டும். அந்த அளவுக்கு சிறுகுறு நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும்.

அப்துல்கலாம் எண்ணப்படி கனவுகளை சிந்தனையாக மாற்றி சிந்தனையை செயல்பாடாக மாற்ற வேண்டும். அதைத் தான் மத்திய அரசு செய்து வருகிறது. நாம் அனைவரும் அவரது எண்ணப்படி கனவு கண்டு வளர்ச்சி எனும் வெற்றியை பெற வேண்டும். எங்களது நோக்கம் வேகமான வளர்ச்சியை எட்டுவதே விருப்பமாகும்.

ஒரு காலத்தில் ராணுவத்தில் ‘புல்லட் புரூப்’ கூட ஒழுங்காக இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மோடி தனது பேச்சை தொடங்கும்போது, “காலை வணக்கம்” என்று தமிழில் கூறினார். பேச்சை நிறைவு செய்யும்போது, “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” என்ற திருக்குறளை தமிழில் கூறி முடித்தார்.

அதன் பிறகு கடற்படை, விமானப்படை, தரைப்படை ஆகிய முப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்கங்களையும் பார்வையிட்டார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*