;
Athirady Tamil News

கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு: ப.சிதம்பரம் மனைவியின் மனு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு..!!

0

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் சொத்துகள் வாங்கியது தொடர்பாகவும், அமெரிக்காவில் உள்ள இரு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாகவும் வருவாய் ஆதாரங்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு 2 முறை வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீசுகளை ரத்துசெய்யக்கோரியும், இதுதொடர்பாக கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் தங்களுக்கு எதிராக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர தடை விதிக்கக்கோரியும் நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள், ‘கருப்பு பணம் ஒழிப்பு சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு அதிகாரம் கிடையாது. வெளிநாட்டில் வாங்கப்பட்ட சொத்துகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக உரிய ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை அளித்த பிறகும் கடந்த 6 மாதங்களாக வருமான வரித்துறை வேண்டுமென்றே, மனுதாரர்களை துன்புறுத்தி வருகின்றனர்’ என்று வாதிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை வக்கீல் வாதிட்டார். அவர் தன் வாதத்தில், ‘ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக நோட்டீசு அனுப்பி விசாரணை நடத்துவது என்பது வேறு. அதுதொடர்பாக வழக்கு தொடர்வது என்பது வேறு. எனவே இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட முடியாது’ என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்தார். அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*