;
Athirady Tamil News

சிபிஎஸ்இ வினாத்தாள் விவகாரம்- வங்கி மேலாளர் உள்பட மேலும் 3 பேர் கைது..!!

0

கடந்த மாதம் 26-ந் தேதி நடந்த சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 பொருளாதார பாடத்தின் வினாத்தாள் மற்றும் 28-ந்தேதி நடந்த 10-ம் வகுப்பு கணித வினாத்தாள் ஆகியவை டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் முன்கூட்டியே வெளியானது.

இதையடுத்து பொருளாதார பாடத்துக்கு வருகிற 27-ந் தேதி மறு தேர்வு நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு நடத்துவது பற்றி இன்றும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில், இமாச்சலபிர தேசம் யுனாவில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ராகேஷ்குமார், அந்த பள்ளியின் கிளர்க் அமித் சர்மா, பியூன் அசோக்குமார் ஆகியோர் வினாத்தாள் வெளியானதற்கு காரணமாக இருந்ததாக கூறி ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பொருளாதார வினாத்தாளை மட்டுமே வெளியிட்டதாக முதலில் கூறப்பட்டது. 10-ம் வகுப்பு வினாத்தாளை வெளியிட்டது யார்? என்பது தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது 10-ம் வகுப்பு வினாத்தாளையும் இவர்களே வெளியிட்டது தெரிய வந்துள்ளது.

ஆசிரியர் ராகேஷ்குமார் யுனாவில் உள்ள டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்தார். யுனாவில் உள்ள நவோதயா வித்யாலயாவில் 3 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. தேர்வு நடத்த மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மையத்துக்கு கண்காணிப்பாளராக ஆசிரியர் ராகேஷ்குமார் நியமிக்கப்பட்டு இருந்தார்.

அவர்தான் வினாத் தாளை தேர்வு மையத்துக்கு கொண்டு வந்து ஒவ்வொரு வகுப்புக்கும் பிரித்து கொடுக்க வேண்டும். வினாத் தாள்களை முன்கூட்டியே அந்தந்த பகுதிக்கு அனுப்பி அங்குள்ள தேசிய வங்கியில் பாதுகாப்பாக வைத்திருப்பது வழக்கம்.

அதன்படி யுனாவில் உள்ள யூனியன் வங்கியில் வினாத்தாள் வைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் அந்த வங்கிக்கு சென்று அன்று நடைபெறும் வினாத்தாளை எடுத்து தேர்வு மையத்துக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக தினமும் காலையில் ஆசிரியர் ராகேஷ்குமார் வங்கிக்கு செல்வார்.

கடந்த 23-ந்தேதி கம்ப்யூட்டர் தேர்வு நடந்தது. அந்த தேர்வுக்கான வினாத்தாளை எடுத்து வருவதற்காக ராகேஷ்குமாரும், அவருடன் அமித்சர்மா, அசோக்குமார் ஆகியோரும் சென்றனர்.

அந்த நேரத்தில் அமித் சர்மா, அசோக்குமார் ஆகியோர் கம்ப்யூட்டர் வினாத்தாளை எடுத்தார்கள்.

ஆனால், ராகேஷ்குமார் பொருளாதாரம் வினாத் தாள் மற்றும் 10-ம் வகுப்பு கணித வினாத்தாள் ஆகியவற்றின் பண்டலின் சீலை உடைத்து வினாத்தாளை தனது செல்போனில் படம் பிடித்தார்.

வினாத்தாளை ஒப்படைக்கும் போது வங்கி மானேஜர் மற்றும் உயர் அதிகாரி உடன் இருக்க வேண்டும். ஆனால், அந்த அதிகாரிகள் அவருடன் இருக்கவில்லை. வினாத்தாளை ராகேஷ் குமார் தன்னிச்சையாக எடுத்து கொள்ள அனுமதித்துள்ளனர்.

செல்போனில் படம் பிடித்த வினாத்தாளை பின்னர் ராகேஷ்குமார் கைகளால் எழுதி பஞ்சாப்பில் உள்ள பெரோஸ் பூரை சேர்ந்த தனது உறவு பெண்ணுக்கு வாட்ஸ்- அப்பில் அனுப்பி உள்ளார்.

அந்த பெண் டெல்லி மற்றும் பஞ்சகுலா ஆகிய இடங்களில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பி இருக்கிறார். அவை 40 வாட்ஸ்-அப் குரூப்களில் பரவ விடப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளை அனுப்பிய அந்த பெண் பெரோஸ்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் நூலகராக வேலை பார்த்து வருகிறார்.

ஆசிரியர் ராகேஷ்குமார் தான் வேலை பார்த்த பள்ளியில் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காக விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு அந்த பெண் முதல்வர் பதவி வாங்கி தருவதாக கூறி இருந்தார்.

டெல்லியில் உள்ள டி.ஏ.வி. பள்ளி தலைமை நிர்வாகத்தில் இருப்பவர்களை எனக்கு தெரியும். அதன் மூலம் முதல்வர் பதவி வாங்கி தருகிறேன் என்று உறுதி அளித்தார்.

இதற்கு பிரதிபலனாக பிளஸ்-2 பொருளாதாரம் மற்றும் 10-ம் வகுப்பு வினாத்தாளை எப்படியாவது எனக்கு முன் கூட்டியே அனுப்ப வேண்டும் என்று கூறி இருந்தார். இதனால்தான் ஆசிரியர் ராகேஷ்குமார் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவருடைய பெயரை வெளியிடவில்லை.

ஆசிரியர் ராகேஷ்குமார் வினாத்தாளை வங்கியில் இருந்து எடுக்கும் போது அருகில் இருந்து கண்காணிக்காமல் இருந்ததற்காக வங்கி மேலாளர் ஷெருராம், தலைமை கேஷியர் ஓம்பிரகாஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். #CBSE #CBSEPaperLeak

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + two =

*