;
Athirady Tamil News

ஜெ. மரண விசாரணை ஆணையத்தில் அமைச்சர்கள் பற்றி ராமமோகன்ராவ் தவறான தகவலை கூறியுள்ளார்: அமைச்சர்

0


ஜெ. மரண விசாரணை ஆணையத்தில் அமைச்சர்கள் பற்றி ராமமோகன்ராவ் தவறான தகவலை கூறியுள்ளார்: அமைச்சர் தங்கமணி பேட்டி

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது.

இந்த விசாரணை ஆணையத்தில் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் ஆஜரானார்.

நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு சுமார் 4 மணி நேரம் பதிலளித்தார். அப்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் குறித்தும் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இன்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆணையம் முன்பு தவறான தகவலை கூறியுள்ளார். அதுதொடர்பாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, நானும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும் அருகில் இருந்ததாக கூறியுள்ளார். அது தவறான தகவலாகும்.

டிச.4ம் தேதி ராசிபுரம் புதுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஜெயலலிதா குணமடைய வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகத்தில் நானும், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டோம். அதேபோல் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும் அன்றைய தினம் வேறு ஒரு ஊரில் இருந்தார்.

முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், சமீபத்தில் தஞ்சாவூருக்கு சென்றார். அங்கு யாரையோ சந்தித்து விட்டு வந்துள்ளார். அவர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இப்படி தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.

டிடிவி தினகரனை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தமிழகத்தை நாங்கள் வழிநடத்தி வருகிறோம். இந்நிலையில், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவுக்கு அமைச்சர்களை பற்றி தவறான தகவல்களை பரப்ப என்ன நிர்ப்பந்தம் ஏற்பட்டதோ தெரியவில்லை.

ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல அமைச்சர்கள் முயற்சிக்கவில்லை என்றும் ராமமோகன்ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

அதுவும் தவறான தகவலாகும். நாங்கள் 3 முறை ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்போது வற்புறுத்தினோம். இதை செயல்படுத்த வேண்டிய நிலையில் இருந்த முன்னாள் தலைமை செயலாளர் எதுவும் செய்யவில்லை.

அமைச்சர்கள் மீது தவறு இருந்திருந்தால், ஜெயலலிதா மரணமடைந்த மறுநாளே ராமமோகன்ராவ் மருத்துவ அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம்.

சுமார் ஒரு ஆண்டிற்கு பிறகு எதற்காக இவர் இப்படி பேசுகிறார் என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை. தமிழக மக்கள் எல்இடி பல்புகளை அதிகம் வாங்கி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 6 =

*