;
Athirady Tamil News

பேராசிரியை விவகாரம்- மகளிர் காங்கிரசுடன் நடிகை குஷ்பு மறியல்..!!

0

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு பேராசிரியை நிர்மலா தேவி அழைத்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைக் கண்டித்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி தலைமை தாங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள். ‘‘எதிர்ப்போம், எதிர்ப்போம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்ப்போம்’’, ‘‘ரத்து செய் ரத்து செய் பாலியல் கொடுமையில் ஈடுபடுவோரின் குடியுரிமையை ரத்து செய்’’ ‘‘கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டிக்கிறோம்’’ என்பன போன்ற கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

திடீர் என்று குஷ்பு மற்றும் பெண்கள் சேப்பாக்கம் சாலையில் அமர்ந்து கொளுத்தும் வெயிலில் சிறிது நேரம் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, அருள் அன்பரசு, விஷ்ணு பிரசாத், முன்னாள் எம்.பி.க்கள் ராணி, விசுவநாதன், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சாந்தி ராஜ்குமார், திருவான்மியூர் சாந்தி, மைதிலி தேவி, சுசீலா கோபால கிருஷ்ணன், ஆலிஸ் மனோகரி, மானசா காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் சிவராஜசேகர், எம்.எஸ்.திரவியன் நிர்வாகிகள் துறைமுகம் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அழைக்கிறோம். அப்படிப்பட்ட குருவே இவ்வளவு குரூரமாக நடந்துகொண்டு இருப்பது வெட்கக்கேடானது, இந்தியாவில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது, உத்தரபிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. எல்லாமே இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவதையே காட்டுகிறது.

மத்தியில் ஆளுகிற மோடி அரசும் சரி மாநிலத்தில் ஆளுகிற ஆட்சியும் சரி, முதுகெலும்பு இல்லாத ஆட்சியாகத்தான் இருக்கிறது. முக்கியமாக அவர்களுக்கு மனசாட்சி என்பது இல்லை. பதவி நாற்காலியின் மீது தான் குறியாக இருக்கிறார்கள். மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லை. மோடி ஆட்சியில் எல்லாவற்றையும் மத கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இங்கே இவ்வளவு பெண்கள் திரண்டு இருக்கிறார்கள். யார், யார் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதெல்லாம் தெரியாது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்றதும் எல்லோரும் திரண்டு இருக்கிறோம். மோடி ஆட்சியில் குற்றவாளிகளை மதத்தின் அடிப்படையில் தண்டிக்கிறார்கள்.

ஐதராபாத் மெக்கா குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு ஒரே மாதிரியாக இருந்ததைக் கண்டுபிடித்து தேசிய புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி குற்றவாளிகள் 10 பேரை கைது செய்தனர். 11 ஆண்டுகள் வழக்கு நடத்தப்பட்டுள்ளது. கடைசியில் அவர்களை குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துள்ளனர்.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி அடுத்த சிலமணி நேரங்களிலேயே பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதுபற்றி யாராவது கேள்வி கேட்டதுண்டா? இப்போது அருப்புக்கோட்டை மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்திலும் துணைவேந்தர் விசாரணை , கவர்னர் விசாரணை, காவல்துறை, சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறார்கள். எந்த விசாரணை நடந்தாலும் உண்மை வெளிவரப்போவதில்லை. இந்த விவகாரத்தில் பின்னணியில் இருப்பது யார், யார் என்ற விவரங்களை பேராசிரியை தெரிவித்து இருக்கிறார். அவர்களை மக்கள் முன்னணியில் அடையாளம் காட்ட வேண்டும். வட மாநிலங்களில் மிகக் கொடூரமாக சிறுமிகளை கொன்றவர்களை நடுரோட்டில் வைத்து சுட்டுத்தள்ள வேண்டும்.

எல்லாத்துறைகளிலும் இந்த மாதிரி பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்த்தப்படுவது உண்மைதான். எந்த மதமும் பெண்களை கொடுமை படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. மோடி இந்துத்துவா என்ற பெயரில் இந்துக்களுக்குத்தான் கெட்ட பெயர் வாங்கி கொடுக்கிறார். மாணவி நிர்பயா கொலை வழக்கில் என்ன தண்டனை கொடுத்தோம்? குற்றவாளிகள் நமது பணத்தில் ஜெயிலுக்குள் சொகுசாக வாழ்கிறார்கள்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறைய பெண்களே இப்போது துணிச்சலாக குரல் எழுப்ப முன்வந்திருக்கிறார்கள். நமது சடங்குகளிலும் தண்டனையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். குறிப்பாக மக்களின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 11 =

*