;
Athirady Tamil News

பிரான்ஸ் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வரும் மேக்ரான்: ஆய்வு..!!

0

ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்யவிருக்கும் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரான்ஸ் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் மற்ற நாட்டினரிடையே பிரான்ஸின் மதிப்பை அவர் அதிகரிக்கச் செய்துள்ளதாகவும் மக்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

பாரீஸிலிருந்து செயல்படும் ஒரு பத்திரிகை, ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஆகியவை இணைந்து 1200 பேரிடம் ஆன்லைனில் ஏப்ரல் 12க்கும் 16க்கும் இடையே மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் இவ்வாறு தெரிவித்துள்ளன.

நாட்டில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள விரும்பி அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வரும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அதன் காரணமாக பல வேலை நிறுத்தங்களையும் எதிர்ப்புப் பேரணிகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில் பிரான்ஸ் வாக்காளர்களில் 60 சதவிகிதத்தினர் அவர் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றங்கள், கல்வி அமைப்பு முதல் தேசிய ரயில்வே வரை பல சீர்திருத்தங்களை மேற்கொள்வதால் பலரின் கோபத்திற்கும் ஆளாகியுள்ள இமானுவல் மேக்ரான் மீது அதிருப்தியில் இருப்பதாக 58 சதவிகிதம்பேர் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் 57 சதவிகிதம்பேர் மேக்ரான் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்களித்தவற்றை சொன்னதுபோலவே செய்வதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பேட்டி ஒன்றில் “நான் செய்வேன் என்று வாக்களித்திருந்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன்” என்று மேக்ரான் தெரிவித்திருந்தார்.

பயங்கரமான கடனில் மூழ்கியிருக்கும் ரயில்வே துறையை மீட்பதற்காக மேக்ரான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை எதிர்த்து மூன்று மாதங்களாக சுழற்சி முறையில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தங்கள் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் மேக்ரான் மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்தங்களை எதிர்த்து பல பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் வெளியுறவுக் கொள்கையைப் பொருத்த வரையில் உள்ளூர் பிரச்சினைகளைவிட அவற்றிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

67 சதவிகிதத்தினர் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுடன் நல்ல உறவை தொடர்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், 63 சதவிகிதத்தினர் வெளி நாடுகளில் பிரான்ஸின் “இமேஜை” அவர் உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

56 சதவிகிதத்தினர் அவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்துள்ளதாகவும் பிரான்ஸில் அந்நிய முதலீட்டை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

27 சதவிகிதத்தினர் ஓய்வூதியதாரர்களின் வரிவிதிப்பு அதிகரிப்பை ஆதரித்துள்ள நிலையில் வெறும் 18 சதவிகிதத்தினர் மட்டுமே மருத்துவத்துறையில் முன்னேற்றங்கள் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் 30 சதவிகிதத்தினர் மட்டுமே மக்களின் கருத்துக்களுக்கு ஜனாதிபதி செவி சாய்ப்பதாகக் கூறியுள்ள நிலையில், செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கும் மேக்ரான் செல்வந்தர்களின் ஜனாதிபதி என்று இடது சாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 3 =

*