;
Athirady Tamil News

வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க முடியாத வடமாகாண கல்வி அமைச்சு..!!

0

வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க முடியாத வடமாகாண கல்வி அமைச்சு.
நிலைமை மோசமடைவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம்.

வடக்கு மாகாணத்தின் பாடசாலைக் கல்விக்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்று வழிப்படுத்த வேண்டியது வடக்கு மாகாணக் கல்வி அமைச்சே, அதற்காகத்தான் வடக்கு மாகாண சபையின் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரும் அதன் கீழுள்ள திணைக்கள அதிகாரிகளும்.

ஆனால் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரைக்கூட நியமனம் செய்யமுடியாத அளவுக்கு நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறு வெளிப்படுத்தி, நிலைமை மோசமடைவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் சொல்லப்பட்டுள்ளதாவது……

யாழ்ப்பாணம் வலயக் கல்வித் திணைக்களத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த திரு.ந.தெய்வேந்திரராஜா கடந்த மூன்றாம் மாதத்துடன் இளைப்பாறியிருந்தார். அவர் இளைப்பாறுவதற்கு முன்று மாதங்களுக்கு முன்னரே வலயக் கல்விப் பணிப்பாளருக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தாமதமாக விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகத் தேர்வும் நிறைவடைந்த நிலையில் இன்னும் யாழ் கல்வி வலயத்திற்கு நிரந்தர வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாமை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் அக்காரியம் முடியாது என்பதே முடிவாகும்.

நேர்முகத் தேர்வுக்குச் சென்றவர்களுள் ஒருவர் வடமாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு ஆளுநரின் அங்கீகாரத்திற்குச் சென்ற நிலையில், முறைப்பாடுகள் செய்யப்பட்டு அந்நியமனம் இரத்து செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது.

ஆளுநரின் கீழுள்ள மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு நடாத்திய நேர்முகத்தேர்வில் தவறு அல்லது குளறுபடி நடைபெற்றிருந்தால் அதற்கு யார் பொறுப்பு?

யாழ்ப்பாணக் கல்வி வலயம் பாடசாலைகளிலும், மாணவர்களிலும் தொகை கூடிய ஒரு கல்வி வலயமாகும். இத்தகைய கல்வி வலயம் நிரந்தர வலயக் கல்விப் பணிப்பாளர் இல்லாமல் இயங்குவது எத்தகைய பாதிப்பை உண்டுபண்ணும் என்பதனை எவரும் உணருவாதாக இல்லை

வேடிக்கையான விடயம் ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ந.தெய்வேந்திரராஜாவின் பதவி முத்திரையையே இன்னும் யாழ் வலயக்கல்வி அலுவலகம் பயன்படுத்துகின்றது.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு உள்ள அதிகாரங்கள் எவ்வகையானவை என்பதனை இந்த வலயக் கல்விப் பணிப்பாளரின் நியமனத் தாமதத்தில் இருந்து விளங்கிக்கொள்ள முடிகின்றது.

இதுமட்டுமன்றி இன்னும் வடமாகாணத்தின் நிலைமை மோசமடையும் அளவுக்கு தலையீடுகளும், தாமதங்களும் ஏற்படத்தான்போகின்றன. இவை எல்லாம் ஒன்பதாம் இடத்தில் தொடர்ச்சியாக வெற்றிவாகை சூடிவரும் வடக்கு மாகாணத்தை அதே இடத்தில் வைத்துக் கொள்வதற்கான முகப்பாகவே பார்க்க முடிகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*