இளைஞர்களுக்கு ஜனநாயக விரோத முன்னுதாரணம் நகரசபை தலைவர்..!!

இளைஞர்களுக்கு ஜனநாயக விரோத முன்னுதாரணத்தினை வவுனியா நகரசபையின் தலைவர் கற்பித்துள்ளார் என நகரசபை உறுப்பினர் சு. காண்டீபன் தெரிவித்தார்.
வவுனியா நகரசபையின் செயற்பாடுகளில் பங்களிப்பு தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வட்டார முறைத்தேர்தலில் மக்களால் மோசமான முறையில் நிராகரிக்கப்பட்டு தோல்வியடைந்த ஒருவர் நகரசபை தலைவராக வர முடியும் என ஜனநாயக விரோத வழிமுறையை இளைஞர்களுக்கு தற்போதைய நகரசபை தலைவர் வழங்கியுள்ளார்.
தனது வட்டாரத்தில் தன்னுடன் போட்டியிட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளரை விட சுமார் 500 வாக்குகள் குறைவாகப்பெற்று தோல்வியுற்ற ஒருவர் தனது மனச்சாட்சிக்கு விரோதமாக தமிழ் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து சதித்திட்டங்களினை அரங்கேற்றி தலைவராகியுள்ளார்.
வவுனியா நகரசபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்ற முடியாமல் போய்விட்டதாக கருத முடியாது. நாம் தேசிய கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்கள் விரும்பாத பாதையில் செல்ல உடன்பாடில்லாமையினாலேயே அந்த கூட்டை விரும்பவில்லை.
வவுனியாவை பொறுத்தவரை தேசியக்கட்சிகள் இரண்டினுடைய செயற்பாட்டுத்தலைவர்களாக இஸ்லாமியர்களே உள்ளனர். ஒரு தமிழ் தலைமை அங்கு இல்லாத நிலையில் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்து அவர்களின் தாளத்திற்கு ஆடும் நிலையில் நாங்கள் இல்லை.
நாம் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை தேசிய உணர்வுடன் கொண்டு செல்லவே விரும்புகின்றோம். இந் நிலையில் எம்மால் நகரசபையில் கொண்டு வரப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளை தற்போதைய தலைவராலோ ஆட்சியில் உள்ள கூட்டுக்கட்சிகளாலோ செயற்படுத்த முடியாது போகும். ஏனெனில் ஆட்சியை நீடித்து வைப்பதற்காக அவர்கள் ஒருவருக்கொடுவர் அஞ்சி முடிவெடுத்து செயற்படுத்துவதற்குள் காலம் கழிந்துவிடும்.
எனவே வவுனியா நகரம் சிறப்பான அபிவிருத்தியை தற்போதைய ஆட்சிக்காலத்தில் காணமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளது.
அதற்குமப்பால் தேசியக்கட்சிகளுடன் ஆட்சி அமைத்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணி தனக்கு கிடைத்த மூன்று விகிதாசார வேட்பாளர்களில் பெண் உறுப்பினர் இருவரை நியமித்துள்ளனர். இவர்களில் ஒருவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவுக்காரர் ஆவார். வவுனியாவில் ஆளுமை உள்ள பெண்களை அடையாளம் காண முடியாத நிலையில் தமது உறவினருக்கு உறுப்புரிமையை வழங்க வேண்டிய நிலையில் அக் கட்சி காணப்படுகின்றமை பெண்களுக்கு துரதிஸ்டமே.
எனவே இந்த ஆட்சி என்பது நீடித்து நிலைக்காது என்பதனை உணர்ந்து புதிய நகரசபைத்தலைவர் சதித்திட்டம் மூலம் ஜனநாயக விரோத முறையில் பெற்றுக்கொண்ட தனது பதவியை மக்களின் வாக்கு எனும் ஜனநாயக பலத்தின் உண்மைத் தன்மையை தானாக உணர்ந்து தமிழ் மக்கள் நலனிற்காக தனது பதவியினை துறந்து வவுனியா நகர மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா