;
Athirady Tamil News

ஐபிஎல் சூதாட்டம்: 4 பேர் கைது..!!

0

உத்தரப் பிரதேசத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை நேற்று (ஏப்ரல் 20) போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.21லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சூதாட்டக் கும்பலைக் கைது செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜெய்பி கிரீன்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்பு அதிரடிப் படை போலீசார், சூதாட்டம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றிவளைத்து 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.21 லட்சம் பணம் மற்றும் சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய 40 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 2 வைஃபை மோடம், 3 எல்இடி டிவி மற்றும் ஒரு பிரின்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆர்.கே.மிஸ்ரா, “ஆன்லைன் செயலிகள் மூலமாகவும், வாய்ஸ் கால் மூலமாகவும் சூதாட்டம் நடத்திய கும்பலை கையும் களவுமாகப் பிடித்துள்ளோம். அவர்கள் பெயர் ஷ்யாம் வர்மா, ஷைலேஷ், அங்கித் குமார் மற்றும் ஜடின். தற்போது இந்தக் குடியிருப்பின் உரிமையாளரைத் தேடிவருகிறோம். இவர்களிடம் ஆக்ரா மற்றும் சோனாபேட் பகுதியைச் சேர்ந்த 400 முதல் 500 வாடிக்கையாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் சென்னை வண்ணாரப்பேட்டையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகன் இருவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − nineteen =

*