;
Athirady Tamil News

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை..!!

0

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு நடக்கும் 20-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதுகின்றன.

சென்னை அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும்(பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது. அனுபவம் வாய்ந்த சென்னை அணி சூப்பர் பார்மில் இருக்கிறது. ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஷேன் வாட்சன் சதம் அடித்து மிரட்டினார். அதே உத்வேகத்தை இந்த ஆட்டத்திலும் தொடரும் வேட்கையுடன் சென்னை வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள். பீல்டிங்கின் போது காயமடைந்த அம்பத்தி ராயுடு இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். அவர் உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கும்.

வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியும் 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 6 புள்ளிகளுடன் உள்ளது. ஐதராபாத்தின் பிரதான பலமே பந்து வீச்சு தான். புவனேஷ்வர்குமார் (5 விக்கெட்), சித்தார்த் கவுல் (6 விக்கெட்), ரஷித்கான் உள்ளிட்டோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசுவதில் கைதேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் பந்து வீச்சு மூலம் சென்னை அணியின் வலுவான பேட்டிங் வரிசை சீர்குலைக்க வியூகங்களை தீட்டி வருகிறார்கள்.

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தின் போது பந்து தாக்கி முழங்கையில் காயம் அடைந்து வெளியேறிய ஷிகர் தவான் இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறி தான்.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் சென்னையும், 2-ல் ஐதராபாத்தும் வெற்றி கண்டுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: வாட்சன், முரளிவிஜய் அல்லது அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), சாம்பில்லிங்ஸ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், கரண் ஷர்மா, ஷர்துல் தாகூர்.

ஐதராபாத்: விருத்திமான் சஹா, ஷிகர் தவான் அல்லது தன்மய் அகர்வால், வில்லியம்சன் (கேப்டன்), யூசுப் பதான், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஷகிப் அல்-ஹசன், கிறிஸ் ஜோர்டான் அல்லது பில்லி ஸ்டான்லேக், புவனேஷ்வர்குமார், ரஷித்கான், சித்தார்த் கவுல்.

இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.

முதல் 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்று இருந்த மும்பை அணி, பெங்களூருவை சாய்த்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். அதே சமயம் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி சொந்த மண்ணில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 16 ஆட்டங்களில் 6-ல் ராஜஸ்தானும், 10-ல் மும்பையும் வெற்றி பெற்றன. போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*