;
Athirady Tamil News

ஐந்தில் ஒரு குழந்தைக்கு உணவில்லையாம்: ஜேர்மனியின் இன்னொரு முகம்..!!

0

சமீபத்தில் சேன்ஸலர் பதவிக்கு போட்டியிட்ட ஏஞ்சலா மெர்க்கல் தனது பிரச்சார உரையில், நம் ஜேர்மனி நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் நாடு என வர்ணித்ததைப் பொய்யாக்கும் விதத்தில் ஐந்தில் ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் குரல் ஒலிக்கிறது.

பெர்லினின் இளைஞர் மையம் ஒன்றில் சிறுவர்களும் சிறுமிகளும் வெட்டப்பட்ட காய்கறிகளை தட்டுகளில் அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து மாலை உணவு சமைப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் பலர் இந்த வார இறுதி விருந்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். Caritas என்னும் ரோமை மையமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் நடத்தும் அந்த இளைஞர் மையத்தின் தலைவரான பாட்ரிக், தம்மிடம் பெரும்பாலான சிறுவர்கள், “நாம் எப்போது சாப்பிடலாம், இன்று முழுவதும் நான் எதுவும் சாப்பிடவில்லையே” என்று கேட்பதைக் கவனித்திருப்பதாகக் கூறுகிறார்.

அவர்களில் பலரது பெற்றோருக்கு தங்களது பிள்ளைகளுக்கு தினசரி உணவு வழங்குவதற்கான பணமோ நேரமோ இல்லை என்று கூறும் பாட்ரிக், இந்த மையத்தின் நோக்கமே பிள்ளைகள் வீட்டில் இருப்பது போன்ற சூழலை உருவாக்குவதுதான் என்கிறார்.

“நான் தினமும் இங்கு வந்து விடுவேன்” என்று கூறும் லைலா என்ற சிறுமி பேசிக்கொண்டே தாங்கள் அனைவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதாக தெரிவிக்கிறாள்.

ஐரோப்பாவின் பொருளாதார மையத்தில் பணம் பொங்கி வழிகிறது, கஜானா நிரம்பி வழிகிறது, வேலையில்லாத் திண்டாட்டமே இல்லை என்பதுபோல் காட்டப்படும் நாட்டில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் 20 சதவிகிதத்தினர் வறுமையில் வாழ்வதாக குடும்ப நல அமைச்சகம் தெரிவிக்கிறது.

ஜேர்மனியின் சராசரி வருமானத்திற்கு கீழ் உள்ள 60 சதவிகித குடும்பங்களில் அவர்கள் வாழ்கிறார்கள். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் குழந்தைகளுக்கான உதவிகளை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ளது.

ஆனால் எதிர்க்கட்சியினரோ இந்த வாக்குறுதிகளெல்லாம் நிறைவேறாது என்கிறார்கள். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான Lisa Paus கூறும்போது, துணைவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வாழ்பவர்களுக்கு அரசாங்கம் அதிக உதவிகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தம்பதிகள் பிரியும் இடத்தில்தான் வறுமை தொடங்குகிறது என்கிறார் அவர். புள்ளிவிவரங்களும் இதை ஆமோதிக்கின்றன, பெற்றோரில் ஒருவரால் மட்டும் வளர்க்கப்படும் குழந்தைகளில் 45 சதவிகிதம் பேர், அதிலும் தாயுடன் வசிப்பவர்கள், வறுமையில் வாழ்வதாக அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.

சில அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் வறுமையைத் தகர்க்க, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு சுமார் 500 யூரோக்கள் ஊதியமாக வழங்க வேண்டும் என்னும் யோசனையை முன்வைத்துள்ளார்கள்.

ஆனால் குடும்ப நல அமைச்சரோ பெற்றோர் வேலைக்கு செல்லும்போது குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் காப்பகங்களை மேம்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − twelve =

*