;
Athirady Tamil News

போதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி..!!

0

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அய்யாபுரத்தை அடுத்த தெற்கு பூலாங்குளத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது42). விவசாயி. இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

லட்சுமணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வாராம். சரியாக வேலைக்கும் செல்வதில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை லட்சுமணன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அதற்கு லட்சுமி மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் லட்சுமியை அடித்து உதைத்தார். பின்பு வீட்டின் வெளியே பாயை விரித்து படுத்து கொண்டார்.

இந்நிலையில் தினமும் கணவனிடம் அடி வாங்கிய லட்சுமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை லட்சுமி வீட்டிலிருந்த உலக்கையை எடுத்து கொண்டு வெளியே வந்தார். அங்கு வீட்டு முன்பு படுத்திருந்த லட்சுமணன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பிணமானார்.

இதுபற்றி அய்யாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவனை கொலை செய்த லட்சுமியை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர். போதையில் தகராறு செய்த கணவனை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − one =

*