;
Athirady Tamil News

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாது – மத்திய நிதி அமைச்சக அதிகாரி உறுதி..!!

0

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை தினசரி மாற்றி அமைக்கின்றன.

சமீப காலமாக இவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் 77 ரூபாய் 19 காசாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நேற்று 77 ரூபாய் 29 காசாகவும், 69 ரூபாய் 27 காசாக இருந்து ஒரு லிட்டர் டீசலின் விலை 69 ரூபாய் 37 காசாகவும் உயர்ந்தது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக வரிகளை விதிக்கின்றன. மத்திய அரசு, ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 19 ரூபாய் 48 காசும், ஒரு லிட்டர் டீசல் மீது 15 ரூபாய் 33 காசும் கலால் வரியாக விதிக்கிறது. இதேபோல் மாநில அரசுகள் தனியாக வரி விதிக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு நாட்டில் விலைவாசி உயர்வுக்கு வழி வகுப்பதால் அவற்றின் மீது விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள். அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்துகின்றன.

மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், இமாசலபிரதேச மாநில அரசுகள் தாங்கள் விதிக்கும் ‘வாட்’ வரியை சிறிது குறைத்தன. ஆனால் மற்ற மாநில அரசுகள் வரியை குறைக்கவில்லை. பொதுவாக வரியை குறைத்து வருவாய் இழப்பு ஏற்படுவதை மத்திய, மாநில அரசுகள் விரும்பவில்லை.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது சரியானது அல்ல. கலால் வரியை குறைக்க வேண்டும் என்பதை அரசியல் ரீதியிலான கோரிக்கையாகத்தான் கருதமுடியும். பெட்ரோலிய அமைச்சகத்திடம் இருந்து இதுபோன்ற கோரிக்கை எதுவும் வரவில்லை.

வரியை குறைத்தால் அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஒரு ரூபாயோ அல்லது 2 ரூபாயோ உயர்வது பணவீக்கத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது.

கடந்த நிதி ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருந்தது. இதை இந்த நிதி ஆண்டில் 3.3 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

எனவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரியை குறைக்க முடியாது. நுகர்வோருக்கு ஏற்படும் கூடுதல் சுமையை குறைக்க மாநில அரசுகள் தாங்கள் விதிக்கும் வாட் வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + four =

*