;
Athirady Tamil News

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடத்த மே 3-ந் தேதி வரை தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

0

தமிழ்நாட்டில் 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இரு கட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதித்து கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டனர். அத்துடன், கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தனர்.

மேலும், இரு தரப்பும் தேர்தல் தொடர்பான நிலவர அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற மே 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை வெளியிட மட்டும் தடையா? வாக்கு எண்ணிக்கையை நடத்திக்கொள்ளலாமா? என்பது பற்றி விளக்கம் கோரி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு தமிழக அரசின் வக்கீல் வினோத் கன்னா நேற்று ஆஜராகி, இது குறித்து முறையீடு செய்தார்

அதற்கு நீதிபதிகள், தாங்கள் முன்பு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் ஏதும் செய்ய முடியாது எனவும், அதிலேயே அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றும், அதனால் மே 3-ந் தேதி வரை ஓட்டு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + fourteen =

*