பிரிட்டனின் குட்டி இளவரசர் பெயரை அதே நாளில் பிறந்த ஒட்டகத்திற்கு சூட்டிய வனவிலங்கு காப்பகம்..!! (வீடியோ)

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர்.
இதற்கிடையே, மீண்டும் கர்ப்பமாக இருந்த கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. வில்லியம் – கேத் தம்பதி புதிய குட்டி இளவரசருடன் மருத்துவமனைக்கு வெளியே வந்து கை அசைத்தனர். இதையடுத்து சில மணி நேரங்களில் அவர்கள் வீடு திரும்பினர். மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளவரசர் லூயிஸ் பிறந்த அதே நாளில் சுமாராக அதே நேரத்தில் இங்கிலாந்தின் பிளாக்புல் வனவிலங்கு காப்பகத்தில் ஒட்டகம் ஒன்று பிறந்துள்ளது. இரண்டு திமில்களை கொண்ட பாக்டீரியன் வகையைச் சேர்ந்த இந்த ஒட்டகக் குட்டிக்கும் லூயிஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு காப்பகம் தெரிவித்துள்ளது.
இளவரசர் லூயிசினை பெருமைப்படுத்தும் விதமாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஒட்டகத்தின் புகைப்படத்துடன் வனவிலங்கு காப்பகம் அதிகாரிகள் டுவிட் செய்துள்ளனர். அரச குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கும், வனவிலங்கு காப்பகத்தில் பிறந்த ஒட்டகத்திற்கும் ஒரே பெயர் வைக்கப்பட்டது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.