;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் மாசுபட்டு வரும் நிலம்: ஆய்வுகள் தரும் அதிர்ச்சி முடிவு..!!

0

உலகின் நீர் நிலைகள் மாசுபட்டு வரும் நிலையில், நிலமும் மாசுபட்டு வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.அதிலும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் இயற்கை வளங்களும் கூட மாசுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றில் சுவிட்சர்லாந்தின் பாதுகாக்கப்பட்ட இயற்கை வளப்பகுதிகளில் உள்ள மண்ணிலும் சுமார் 53 டன் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த துகள்கள் 5 மில்லிமீற்றருக்கும் குறைவான விட்டம் கொண்டவையாகும்.கடல் நீர் மற்றும் நன்னீரில் பிளாஸ்டிக் மாசு இருப்பது நன்கறியப்பட்ட நிகழ்வு என்றாலும், மண்ணில் இந்த அளவிற்கு எப்படி பிளாஸ்டிக் மாசு ஏற்பட்டது என்பதற்கான தெளிவான காரணம் புரியவில்லை.

இதை அறிவதற்காக சுவிட்சர்லாந்தில் 29 வெள்ளம் ஏற்படும் இடங்களில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் பெர்ன் பல்கலைக்கழக புவியியல் துறை ஆய்வாளர்களால் நுண்ணோக்கியின் உதவியால் ஆராயப்பட்டன.

இந்த இடங்கள் அரசால் பாதுகாக்கப்படும் இயற்கை வளப்பகுதிகளாக இருந்தபோதும் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளில் 90 சதவிகிதம் மாதிரிகளில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த பிளாஸ்டிக் நுண் துகள்கள் பெரும்பாலும் பெரிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு அருகில் கிடந்ததால், அவை பெரிய பிளாஸ்டிக் பொருட்கள் உடைந்ததால் உருவானதாக இருக்கும் என்ற முடிவுக்கு வரப்பட்டது.

வெகு தொலைவிலுள்ள மலைப்பகுதிகளில் காணப்பட்ட துகள்கள் காற்றில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

எங்கு மக்கள் அதிகம் வாழ்கிறார்களோ அங்கு அதிக மண் மாசு காணப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்பு ஆபத்தானவை, காரணம் இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் மண் வளத்திற்கு முக்கிய காரணமான மண் புழுக்களை பாதிக்கவும் ஏன் கொல்லவும் கூடியவையாகும்.

இந்த பிளாஸ்டிக் துகள்கள் விவசாய மண்ணில் காணப்படும்போது அவை உணவுச் சங்கிலியை எவ்விதத்தில் பாதிக்கும் என்பதை அறிய இன்னும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + seven =

*