;
Athirady Tamil News

நேபாளத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ள நீர்மின் திட்ட அலுவலகத்தில் குண்டு வெடிப்பு..!!

0

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 25-ந் தேதி நேபாள நாட்டுக்கு சென்று இருந்தார். அப்போது அவரும், அந்த நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ராலாவும் முன்னிலை வகிக்க இந்திய அரசுக்கு சொந்தமான சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் நிறுவனத்துடன் நேபாளம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.

அந்த ஒப்பந்தம், நேபாளத்தில் உள்ள அருண் ஆற்றின் நீரை பயன்படுத்தி அருண்-3 என்ற நீர் மின்திட்டத்தை நிறைவேற்ற வழி வகுக்கிறது.

அந்த வகையில் இந்த திட்டம், இந்தியா-நேபாளம் ஆகிய இரு நாடுகளின் கூட்டு திட்டம் ஆக அமைகிறது. இந்த நீர் மின்திட்டம் 2020-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும்.

இந்த நீர் மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுமார் 500 கி.மீ. தொலைவில் உள்ள டும்லிங்தார் பகுதியில் அமைந்து உள்ள திட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

வரும் 11-ந் தேதி நடக்க உள்ள இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அங்கு செல்ல உள்ளார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந்த நிலையில், அந்த அலுவலகத்தில் நேற்று பலத்த சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

இதுபற்றி சங்குவசப்பா மாவட்ட தலைமை அதிகாரி சிவராஜ் ஜோஷி கூறுகையில், “ 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ள அருண்-3 நீர் மின்திட அலுவலக வளாக சுவர், குண்டுவெடிப்பில் சேதம் அடைந்தது. இதில் யாரும் காயம் அடையவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

நேபாளத்தில் 1½ பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,750 கோடி) நேரடி முதலீட்டில் நிறைவேற்றப்படுகிற அருண்-3 நீர் மின்திட்டம், மின் பற்றாக்குறையால் தவித்து வருகிற நேபாளத்துக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் ஒரே மாதத்தில் இந்தியாவுடன் தொடர்புடைய இடத்தில் நடைபெற்ற இரண்டாவது குண்டுவெடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 17-ந் தேதி நேபாள நாட்டின் பிராத் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் முகாம் அலுவலகத்தின் வெளியே பலத்த சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பால் உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இருப்பினும் குண்டுவெடிப்பின் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + sixteen =

*