சமூகத்தின் மாற்றம் பெண்களின் கைகளிலேயே தங்கியுள்ளது – வன்னி எம்.பி.சி.சிவமோகன் தெரிவிப்பு..!!

புதுக்குடியிருப்பில் அண்மையில் நடைபெற்ற வன்னிக்குறோஸ் மகளிர் பேரவையின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி சு.வளர்மதி தலைமையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற போதே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்
கடந்த கால ஆயுதப் போராட்டங்களால் பெண்கள் பல சொல்லொனாத் துயரங்களைச் சந்தித்துள்ளனர். தமது வாழ்வாதாரத்தினை முழுமையாக இழந்து அநாதரவாக கைவிடப்பட்டனர். கொடூர இந்த யுத்தத்தினால் வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் தமது கணவனை இழந்து யாருமற்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சுதந்திரம் இன்று அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் தமது அன்றாட வாழ்வைக் கடத்துவதற்குக் கூட பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கவேண்டியவர்களாக உள்ளனர். யுத்தம் நிறைவடைந்து 08 வருடங்களைக் கடந்துள்ளபோதும் அவர்களுக்கான உரிய தீர்வுகளை தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று ஆட்சியமைத்திருக்கும் இந்த நல்லாட்சி அரசு வழங்காமல் காலத்தை இழுத்தடிப்புச் செய்கிறதே தவிர தமிழ் மக்களின் நலனில் உரிய அக்கறை கொள்ளவில்லை.
2009 இறுதி யுத்தத்தின் பின் பெண்கள் வன்னியில் ஒருங்கினைந்து நடாத்திய பாரிய எழுச்சி நிகழ்வாக இது பார்க்கப்படுகின்றது. யாழ் முத்துலட்சுமி சகோதரிகளின் நாதஸ்வர இசையுடன் நிகழ்வின் பொதுச்சுடரினை மாவீரரின் தாயார் ருக்மணிதேவி பிரகாசலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்ததுடன், பெண்கள் சார்ந்த ஆரம்ப உரையினை வடக்கு மாகாண ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் ஜெயா தம்மையா நிகழ்த்தியது சிறப்பம்சம்.
தொடர்ந்து ‘வன்னி முரசம்’ என்கிற பத்திரிகையினை நிகழ்வின் இணை பிரதம விருந்தினர் வன்னிகுறோஸ் சுகாதார நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் வெளிட்டுவைக்க, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும், யாழ் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் பத்திரிகையினைப் பெற்றுக்கொண்டார். கார்த்திகைப் பூ மற்றும் முரசு ஆகியவை கொண்டதாக பத்திரிகையின் சின்னம் அமைக்கப்பட்டிருந்தது.