;
Athirady Tamil News

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்..!!

0

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்க வந்திருந்தனர்.

அப்போது ஒரு பெண் 2 குழந்தைகள் மீது திடீர் என மண்ணெண்ணெய் ஊற்றினார். பின்னர் தனது உடலின்மீதும் ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி வேறு இடத்துக்கு அழைத்து சென்றனர்.

தீக்குளிக்க முயன்ற பெண்ணின் பெயர் மணிமேகலை (வயது 32). திண்டுக்கல் குள்ளனம்பட்டியை சேர்ந்த முத்துராமன் மனைவி ஆவார். இவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

எனது கணவர் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு சந்தோஷ் (9) என்ற மகனும், சஞ்சனா (7) என்ற மகளும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான எனது கணவர் தினசரி குடிபோதையில் வந்து என்னையும், எனது குழந்தைகளையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்வார். அவரது கொடுமை தாங்காமல் நாங்கள் 3 பேரும் தனியாக வசித்து வருகிறோம். நான் கூலி வேலை பார்த்து எனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன்.

இருந்த போதும் அடிக்கடி எனது கணவர் நான் இருக்கும் வீட்டுக்கு வந்து என்னிடம் உள்ள பணத்தை பறித்து சென்று விடுவார். நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார்.

இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கணவருக்கு ஆதரவாக எனது அண்ணன் மாரிமுத்துவும், அவரது மனைவி பவித்ராவும் உள்ளனர். எனவே எனது கணவரிடம் இருந்து என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து மனுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்து சென்றார்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளிக்க முயல்வது இது 5-வது சம்பவம் ஆகும். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்களிடம் உள்ள உடமைகள் போலீசாரால் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். யாரேனும் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தால் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அப்படி இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தீக்குளிப்பை தடுக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிரந்தரமாக சின்டெக்ஸ் தொட்டிகளில் தண்ணீரும் நிரப்பி தயார் நிலையில் உள்ளது.

2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை படத்தில் காணலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + one =

*