;
Athirady Tamil News

தஞ்சை அருகே கோவில் திருவிழாவில் 3 பேர் படுகொலை..!!

0

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் மஞ்சவயல் கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி 2 சமூகத்தினர் கோவிலில் தரிசனம் செய்ய கூடி இருந்தனர்.

கோவிலில் எந்த சமூகத்தினருக்கு முதல் மரியாதை செய்வது என்பதில் பிரச்சினை இருந்து வந்தது. சுடுகாட்டு பிரச்சினையும் நீண்ட காலமாக நீடித்து வந்தது. இந்த பிரச்சினை கோவில் திருவிழாவின் போது மோதலாக வெடித்தது.

இரு தரப்பை சேர்ந்தவர்களும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். உருட்டுக் கட்டைகளாலும் சரமாரியாக தாக்கினர்.

இந்த மோதலில் சிவனேசன் (17), பிரதீப் (32) ஆகிய 2 இளைஞர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோதலில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ்கண்ணா தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.

கொலையுண்டவர்களில் ராஜேஷ்கண்ணாவும், பிரதீப்பும் அண்ணன்-தம்பிகள். இவர்களின் தந்தை சண்முகசுந்தரம் இந்த மோதலில் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

அவரும் வீரபாகு, கபிலன், விமலேந்திரன் ஆகிய 3 பேரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மோதலால் முருகன் கோவில் வளாகம் போர்க்களம் போல் காணப்பட்டது. செருப்புகள், சேர்கள் சிதறி கிடந்தன.

கோவில் விழாவில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.ஐ.ஜி. லோகநாதன், சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க மஞ்சவயல் கிராமம் முழுவதும் அதிவிரைவு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 16 =

*