;
Athirady Tamil News

ஈழத் தமிழினத்தின் விடிவுப் பகலவன் இன்னும் உதிக்கவில்லை: துரைராசசிங்கம்..!!

0

தொழிலாளர்கள் விடுதலை பெற்ற போதிலும் ஈழத் தமிழினத்தின் விடிவுப் பகலவன் இன்னும் உதிக்கவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

வெல்லாவெளியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“பௌத்த மக்களின் வெசாக் புனிதவாரம் என்பதால் ஏழாம் நாள் தான் விடுமுறை ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வேண்டுகோளை நாம் புறக்கணிக்கவில்லை. அதனாற் தான் பௌத்த வழிபாட்டு மையங்களுக்கு அப்பால் வந்து தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றோம்.

தொழிலாளர்கள் விடுதலை பெற்றார்கள் அதனால் ஆடினார்கள், பாடினார்கள். ஆனால் ஈழத் தமிழினத்தின் விடிவுப் பகலவன் இன்னும் உதிக்கவில்லை. அவ்வப்போது விடிவெள்ளிகள் தோன்றின. ஆனால், இன்னும் விடியவில்லை.

அத்தகையதோர் விடிவெள்ளிதான் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தோன்றியது. இன்றுவரை மலர்ந்தும் மலராத பாதி மலராயும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதாயும் தான் நிலைமை இருக்கின்றது. நாட்டின் பன்முகத் தன்மை அங்கீகரிக்கப்பட வேண்டும், அதற்கேற்ற அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும், எமது அன்றாடப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும், என்றெல்லாம் கோரி நிற்கின்றோம். பல ஆரம்பிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவை அறைகுறையாய் நகர்கின்றன.

அவை முழுமை அடைய வேண்டும். புதிய அரசியலமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை விரைவு படுத்தப்பட்டு முற்றுப் பெற்று நடைமுறைக்கு வரவேண்டும். பிரிக்கப்படாத, பிரிக்கப்பட முடியாத, ஒரே நாட்டுக்குள் பிராந்திய ஆளுகையை அங்கீகரிக்கும் கூட்டாட்சியாம் சமஷ்டியே எமது கோரிக்கை. இது தமிழர்களுக்கான வரப்பிரசாதம் அல்ல. நாட்டுக்கான நடப்பியல் கொள்கை.

துவேசவாதிகளால் எதிர்க்கப்படுகின்றது என்பதால் அதனைத் தூக்கிப் போட்டுவிட்டு நாட்டைக் குட்டிச் சுவராக்க முடியாது. நல்லாட்சியின் நிறுவுனர் சோபித தேரருக்கு நாட்டின் இருபெருந் தலைவர்களும் செய்யும் நன்றிக் கடனும், பேரஞ்சலியும் புதிய அரசியலமைப்பை ஆக்கி நடைமுறைக்கு இட்டுச் செல்வதாய் தான் இருக்கும்.

கூட்டு எதிர்க்கட்சி இதனைக் குழப்பக் கூடாது. மஹிந்த ராஜபக்ஷ அமைத்த நிபுணர் குழுவும் கூட்டாட்சியைத் தானே அறிக்கையிட்டது. ஆட்சியைப் பிடிப்பதற்காக நாட்டிற்கு தீயிட்டுவிட்டுக் குளிர்காய முற்படுவதில் என்ன நியாயம் இருக்கின்றது.
ஆட்சியை வீழ்த்தக் கைகொடுக்கவில்லை என்பதால் தானே எதிர்க்கட்சித் தலைவர் மீது கோபம். பிரதமராக நினைப்பவரல்ல எமது எதிர்க்கட்சித் தலைவர். நாட்டின் பிணியை நீக்கச் செயற்படுபவர். எதிர்காலத்தில் கூட எமக்கு எதிர்க்கட்சித் தலைமை வேண்டாம். நாங்கள் பிரிவினை கோரவில்லை பிராந்திய உரிமை கோருகின்றோம்.

இது வடக்கு கிழக்கை வாழ்விக்க அல்ல. தெற்கு மேற்குக்கெல்லாம் தெளிவான அதிகாரம் வழங்கிடத் தான். கூட்டு எதிர்க்கட்சி அன்பர்களைக் கூவி அழைத்துக் கூறுகின்றோம். இன்னும் இருக்கும் பதினெட்டு, இருபது மாதங்களுக்குள்ளே புதிய அரசியலமைப்பை முழுமைப்படுத்த ஒத்துழையுங்கள். ஓரணியில் திரள்வோம் ஒற்றுமையாய்க் குரல் கொடுப்போம், அரசியலமைப்பை வென்றெடுப்போம், நாம் அத்தனை பேரும் பயன்பெறுவோம்” என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 14 =

*