;
Athirady Tamil News

மேதினப் பேரணியில் ஜே.வி.பியுடன் இணைந்த சுமந்திரன் எம்.பி..!!

0

போர்க் குற்ற விசாரணைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவரும் ஜே.வி.பி யினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தின ஊர்வலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இணைந்துகொண்டிருந்தார்.வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு மே முதலாம் திகதியான நேற்று இடம்பெறும் சர்வதேச தொழிலாளர் தினத்தை மே ஏழாம் திகதிக்கு ஸ்ரீலங்காவின் மைத்திரி – ரணில் தலைமையிலான அரசு ஒத்திவைத்துள்ள நிலையில், தென்பகுதியைச் சேர்ந்த சிங்களக் கட்சியான ஜே.வி.பி யினர் நேற்று யாழ்ப்பாணத்தில் மே தினத்தை நடத்தினார்.

இதற்கமைய ஜேவிபி மே தின பேரணி யாழ்ப்பாணத்தில் நேற்று மதியம் றக்கா வீதியில் ஆரம்பமானது. இதில் ஜேவிபியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, ஜே.வி.பி யின் தொழிற்சங்கத் தலைவசரான கே.டி.லால்காந்த உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு திடீரென வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜே.வி.பி.யின் தலைவர்களுடன் கைகொடுத்து இன்முகத்துடன் அவர்களை வரவேற்றதுடன் அவர்களுடன் இணைந்து பேரணியில் கலந்துகொண்டார்.பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு முழுமையான ஒத்துழைப்பை ஜே.வி.பி வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

அநுரகுமார திஸாநாயக்க, கே.டி.லால்காந்த உட்பட ஜே.வி.பி யின் முக்கியத் தலைவர்கள் அந்தக் காலகட்டத்தில் வடக்கு – கிழக்கிலுள்ள படைமுகாம்களுக்கும் நேரடியாக சென்று தமிழ் மக்கள் மீது படுகொலைகளைக் கட்விழ்த்துவிட்டுக்கொண்டிருந்த சிங்களப் படையினருக்கு தொடர்ச்சியாக உற்சாகம் அளித்து வந்ததும் இங்கு நோக்கத்தக்கது.இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கான வழக்கை நீதிமன்றில் தாக்கல் செய்ததும் கூட, இந்த ஜே.வீ.பி. கட்சிதான்.

இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கி விசேட நீதிமன்ற பொறிமுறையொன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம் வலியுறுத்திவரும் நிலையில், அதற்கு இடமளிக்கக் கூடாது என்று உறுதியாகத் தெரிவித்துவரும் ஜே.வி.பி, இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் இறையாண்மையை பாதிப்பதுடன் போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை காட்டிக்கொடுத்ததாக அமைந்துவிடும் என்றும் கூறி வருகின்றது.

இப்படிப்பட்ட ஜே.வீ.பியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில வரவேற்றிருந்தமை தமிழ் மக்களின் கடும் விசனத்திற்கு உள்ளாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − eight =

*