;
Athirady Tamil News

சூப்பர் பொலிசாக மாறிய யாழ் இளைஞர்கள்: திருட்டு கும்பலை ஒரே நாளில் பிடித்தனர்..!!

0

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக பெண்களின் சங்கிலிகளை அறுத்த வந்த கும்பலை சேர்ந்த ஒருவன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான். மிக நூதனமான முறையில் இளைஞர்கள் இவனை மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து, அங்கிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை இரண்டு திருடர்கள் அறுத்துள்ளனர். பெண்மணியுடன் நடந்த இழுபறியில் ஒரு திருடனின் கைத்தொலைபேசி அங்கு தவறி விழுந்து விட்டது. பெண் கத்தி குழறியதும், கைத்தொலைபேசியை எடுக்க அவகாசமில்லாமல் தப்பிச் சென்றுவிட்டனர். திருடர்களின் மோட்டார்சைக்கிள் இலக்கமும் சிசிரிவி கமராவிலிருந்து இளைஞர்களால் திரட்டப்பட்டது.

அந்த பகுதி இளைஞர்கள் அந்த தொலைபேசியை எடுத்து, அதிலுள்ள இலக்கங்களிற்கு அழைப்பேற்படுத்தி பேசியுள்ளனர். எனினும், அந்த தொலைபேசி இலக்கத்திற்குரியவனின் விபரத்தை யாரும் கொடுக்கவில்லை. பின்னர், வேறு இலக்கங்களில் இருந்து தனியார் நிறுவனங்களில் இருந்து பேசுவதாக அழைப்பேற்படுத்தி, பரிசுப்பொதிகள் உள்ளதாக கூறி பேசியுள்ளனர். இதன்போது, பெண்ணொருவர் தனது முகவரியை வழங்கியுள்ளார். அது யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டப்பகுதி முகவரி.

அன்றிரவு அங்கு சென்ற இளைஞர்கள் அந்த பெண்ணிடம் திருடனின் தொலைபேசி இலக்கத்தை பற்றி விசாரித்தனர். எனினும், பெண் தகவல் கொடுத்து ஒத்துழைக்கவில்லை. இறுதியில் அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்களின் உதவியுடன் தகவலை திரட்டி, அன்றிரவே மோட்டார்சைக்கிள் இலக்கத்திற்குரியவனின் வீட்டுக்குள் நுழைந்து அவனை பிடித்து விசாரணை செய்தனர்.

எனினும், மோட்டார்சைக்கிள் தன்னுடையதென்பதை ஒத்துக்கொண்டபோதும், திருட்டுக்கு தான் வரவில்லையென அவன் மறுத்துள்ளான். சில நண்பர்களிற்கு மோட்டார்சைக்கிளை கொடுத்ததாக கூறினான். அவனை அழைத்து வந்து அன்றிரவே, வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்தனர் இளைஞர்கள்.

இராசாவின் தோட்டம்,முழவை சந்தி, மற்றும் குருநகர் பகுதிகளை சேர்ந்த சுமார் 15, 20 இளைஞர்கள் சங்கிலியறுப்பதை “வாழ்வாதார தொழிலாக“ மேற்கொண்டிருப்பது கைதான இளைஞனிடம் நடத்திய விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + nineteen =

*