;
Athirady Tamil News

ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்..!!

0

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட ஆலோசகர் டி.ஆர்.ஹிறோட்டோ இசுமி உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர்.

ஜனாதிபதி அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜப்பானிய பிரமருடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக இப்பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

துறைமுக அபிவிருத்தி, டிஜிட்டல் மயப்படுத்தலுக்கான உதவி, சக்தி வளம், சுற்றுலா, சுகாதாரம் உட்கட்டமைப்பு வசதி, சமுத்திர பாதுகாப்பு ஆகிய துறைகளில் இலங்கைக்கு வழங்கும் உதவியை மேலும் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடியை தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் சக்திவள திட்டங்களுக்கான நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ஜப்பானிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக உதவிகளை வழங்குமாறும் ஜனாதிபதி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் பிராந்திய ரீதியாக பாரிய அச்சுறுத்தலாக உள்ள போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவியை பெற்றுத் தருமாறும் ஜனாதிபதி பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனச்சி சுகனுமா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − ten =

*