;
Athirady Tamil News

திமுக – காங்கிரஸ் உறவை சிதைக்க முடியாது – திருமாவளவன்..!!

0

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் மரியாதை நிமிர்த்தமாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக சந்தித்தோம். அதே வேளையில் 2019 நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் எமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். குறிப்பாக சீதாராம் யெச்சூரியிடம் பேசும்போது மதசார்பற்ற ஜனநாயக கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு இடதுசாரிகளுக்கே உள்ளது என்று சுட்டிகாட்டினோம்.

அத்துடன் மதசார்பற்ற வாக்கு வங்கியை சிதற விடாமல் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் மதவாத சக்திகளை முறியடிக்க முடியும் என்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

அதே போல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த போது மீண்டும் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது, அதற்கு மதசார்பற்ற வாக்கு வங்கிகள் சிதறக்கூடாது எனவும் சுட்டி காட்டினோம். அத்துடன் ஜூன் மாதம் இறுதியில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் தேசம் காப்போம். மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தோம்.

எமது வேண்டுகோளை ராகுல்காந்தி ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பின் போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கு காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் நடத்திய போராட்டங்களுக்கு நன்றியை தெரிவித்தோம். இரு தலைவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பின் மூலம் தேசிய அளவில் 3-வது அணி தேவையில்லை என்பதை சுட்டி காட்டி இருக்கிறோம்.

தற்போதைய சூழலில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதே நம் முன்னால் உள்ள சவால் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். விடுதலை சிறுத்தையை பொறுத்த வரையில் தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியவை இடம் பெறுகின்ற கூட்டணியிலேயே இடம் பெறும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையில் இடைவெளி இருப்பதாக ஒரு தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே நல்லிணக்கமான உறவு நீடிக்கிறது. வதந்திகளால் அவதூறுகளால் எதிர்கட்சிகளின் உறவை சிதைக்க முடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*