மத்துகம ஜெயகலா கொலை விவகாரம்: முச்சக்கரவண்டியிலிருந்து பெண்ணை தூக்கி எறிந்த வண்டி ஓட்டுநர் கைது..!! (வீடியோ)

மத்துகமவைச் சேர்ந்த கோவிந்தராஜா ஜெயகலாவின் மர்ம மரணம் தொடர்பில் அவர் பயணம் செய்த முச்சக்கர வண்டி ஓட்டுநரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபருக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
மத்துகம பிலிங்கஹவத்தையைச் சேர்ந்த 54 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் பெருந்தெருக்கள் அதிகார சபையின் முழு நேர ஊழியராக பணியாற்றிவருவதுடன் பகுதி நேரமாகவே மத்துகமவில் முச்சக்கர வண்டி ஓட்டிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது-
களுத்துறை மத்துகம ஹோர்கன் தோட்டத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான கோவிந்தராஜா ஜெயகலா (வயது 26), வேலை முடிந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது பயணத்தின் இடைநடுவே அவர் முச்சக்கரவண்டியிலிருந்து வெளியே பாய்ந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அப்பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறி அங்கிருந்த மக்கள் அதே முச்சக்கர வண்டியில் ஏற்றி விட்டுள்ளனர்.
அதற்கு ஓட்டுனரும் இணக்கம் தெரிவித்துள்ளார். சிறிது தூரம் சென்ற பின்னர் ஓட்டுனர் இடைநடுவில் அப்பெண்ணை தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளார்.
வீதியில் கிடந்த பெண் தொடர்பில் ஊர் மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அப்பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் அதிக குருதிப்போக்கு காரணமாக அப்பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இப்பெண் வாகனமொன்றினால் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் ஆரம்பத்தில் சந்தேகம் கொண்ட போதும் அது தொடர்பில் ஆராய்வதற்காக சீசீடீவி கமராவை சோதனை செய்தபோதே முச்சக்கரவண்டியிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டது போன்ற காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.
வண்டியை அடையாளம் கண்ட மத்துகம பொலிஸார் வியாழக்கிழமை இரவு சந்தேக நபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
எனினும் இப்பெண் முச்சக்கர வண்டியிலிருந்து பாய்ந்தது மற்றும் காயங்களுக்கு உள்ளான அவரை வைத்தியசாலையில் சேர்க்காமல் வீதியில் எறிந்தது ஆகிய சம்பவங்கள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால் உண்மையை கண்டறியும் நோக்கில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.