;
Athirady Tamil News

கிழக்கின் அபிவிருத்தியை அரசு புறக்கணிக்கின்றதா? – முன்னாள் முதலமைச்சர் கேள்வி..!!

0

கிழக்கு மாகாணத்தை அங்குள்ள வளங்களைக் கொண்டே அபிவிருத்தி செய்யக்கூடிய நிலையிருந்தும் அரசாங்கம் அதனைக் கருத்திற் கொள்ளாதிருப்பது கிழக்கைப் புறக்கணிப்பதாக அமைவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, “கிழக்கில் எனது ஆட்சி நிலவியபோது, கிழக்கிலுள்ள உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி மாகாணம் முழுவதையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் சாத்தியமான வள ஆய்வுகளைச் செய்து அறிக்கைகளை அரசுக்குச் சமர்ப்பித்தோம்.

பல முன்மொழிவுகளைச் செய்தோம். ஆனால், அவை எதுவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

நான் மேற்கொண்ட செயற்திறன் மிக்க திட்ட முன்மொழிவுகளும், அபிவிருத்திகளும், இனம், மதம், மொழி, சார்ந்து ஒருபோதும் இருந்ததில்லை.

குறிப்பாக மூவினத்தவர்களுக்கும் பயன்தரத்தக்கதாக கிழக்கு மாகாணத்தில் 3 தொழிற்பேட்டைகளிள் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக குறித்த திட்டம் இருந்தது.

அத்துடன் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரைக்கும் புகையிரதப் பாதையை விஸ்தரித்தல், பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு ஊடான கொழும்பு யாழ்ப்பாணம் திருகோணமலை அதிவேக நெடுஞ்சாலை, உல்லாசத்திற்காக கிழக்குக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும், உள்ளுர் பயணிகளுக்கும், வசதியளிக்கும் வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, பொத்துவில் ஆகிய இடங்களில் விமான நிலைய அபிவிருத்தித் திட்டங்கள் என்பன என்னால் முன்டிமொழியப்பட்டவற்றில் சிலவாகும்.

இந்த விடயங்கள் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அத்துடன் வளப்பங்கீடு இடம்பெறுவதோடு தேசிய உற்பத்தியிலும் கிழக்கு மாகாணம் கணிசமான பங்களிப்பைச் செலுத்த முடியும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*