;
Athirady Tamil News

கர்நாடகாவில் நாளை சோனியாகாந்தி பிரசாரம்..!!

0

223 தொகுதிக்கான கர்நாடகா சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

இங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவும் போராடுகிறது. இதற்காக இரு கட்சி தலைவர்களும் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திரமோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் மற்றும் பா.ஜனதா ஆளும் மாநில முதல்-மந்திரிகள் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இதற்கு பதிலடியாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் மத்திய பா.ஜனதா பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பா.ஜனதாவின் நட்சத்திர பிரசாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் காங்கிரஸ் திணறுகிறது. எனவே காங்கிரஸ் மேலிடம் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, பிரியங்கா உள்ளிட்டோரை களம் இறக்க முடிவு எடுத்துள்ளது. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் சோனியாகாந்தி தீவிரமாக இருப்பதால் பிரசாரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி நாளை மாலை 3 மணிக்கு பிஜபூரில் உள்ள சரவாடா கிராமத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் அவரின் வருகை காங்கிரஸ் கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசியலில் ஒதுங்கியிருந்த சோனியாகாந்தி 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களத்துக்கு வருகிறார். அவர் 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்தார். அப்போது சோனியாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பாதியிலேயே பிரசாரத்தை முடித்துக் கொண்டார். அதன்பிறகு அரசியல் பணிகளில் ஈடுபடாமல் இருந்தார்.

உடல்நிலையை கருத்தில் கொண்டு பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் (பிப்ரவரி-மார்ச் 2017), குஜராத், இமாசலபிரதேசம் (டிசம்பர் 2017), திரிபுரா, மேகாலயா, நாகலாந்து (பிப்ரவரி 2018) தேர்தல்களில் அவர் பிரசாரம் செய்யவில்லை.

அதன் பிறகு கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகியதால் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில்தான் கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் பணியில் ஈடுபடாமல் இருந்த சோனியா, கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்குகிறார். பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கவே அவர் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரகாஷ் ரத்கோட் தெரிவித்தார்.

இதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பெங்களூரில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.

சோனியாகாந்தி வடக்கு கர்நாடகாவில் பிரசாரத்தில் ஈடுபடும்போது ராகுல்காந்தி தெற்கு கர்நாடகாவில் பிரசாரம் செய்கிறார். அவர் இன்று முதல் 10-ந்தேதி வரை பிரசாரம் செய்வார். 9-ந்தேதி பெங்களூரில் வீதி வீதியாக வாக்கு சேகரிக்கிறார். இதேபோல புறநகரில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

சோனியா பிரசாரம் செய்யும் அதே தினத்தில் பிரதமர் மோடி பிஜப்பூர் மாவட்டத்தில் வாக்கு சேகரிக்கிறார். சோனியாவும், மோடியும் பிஜப்பூரில் போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். #karnatakaassemblyelections #congress #soniagandhi

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*