பாகிஸ்தான் – உள்துறை மந்திரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மேலும் ஒருவர் கைது..!!

பாகிஸ்தான் நாட்டு உள்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் அஹ்சன் இக்பால் (59). ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த இவர், நேற்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்கு உட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது ஒரு வாலிபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். குறிதவறி பாய்ந்த தோட்டா இக்பாலின் வலதுகை தோள்பட்டையை பதம் பார்த்தது. இதுதொடர்பாக அபித் உசேன் (21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அஹ்சன் இக்பாலுக்கு நாரோவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அவர் உடல்நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டார். விரைவில் அவர் குணமடைவார் என தெரிவித்தனர்.
மேலும், அசீம் என்கிற காஷி என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பிஸ்டல் மற்றும் துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Pakistan #Interiorminister #AhsanIqbal