;
Athirady Tamil News

அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால் மிகப்பெரிய வருத்தத்தை சந்திக்கும்: ஈரான் அதிபர் எச்சரிக்கை..!!

0

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு முற்றிலும் உடன்பாடு கிடையாது.

இதுதொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கடந்த 1-ந் தேதி டிரம்ப் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு தொலைக்காட்சியில் நேரலையில் பேசிய ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி, “அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால், இதற்காக வரலாற்று ரீதியிலான மிகப்பெரிய வருத்தத்தை அந்நாடு சந்திக்கும்” என எச்சரித்தார். மேலும் “டிரம்ப் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்கொள்வதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. நாங்கள் அதனை எதிர்கொள்வோம்” என்றும் அவர் கூறினார்.

தன்னுடைய அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதி வாய்ந்தது என குறிப்பிட்டுள்ள ஈரான், இந்த ஒப்பந்தம் மறு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல என கருதுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 6 =

*